வெட்டுக்காடு கடமான்குளம் கரை உடையும் அபாய நிலையில் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு
கூடலுார்: தொடர்ந்து பெய்த மழை காரணமாக நிரம்பிய வெட்டுக்காடு கடமான் குளத்தின் கரைப்பகுதி உடையும் அபாய நிலையில் இருந்ததால் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.
கூடலுார் அருகே வெட்டுக்காடில் கடமான் குளம் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் இக்குளத்தின் நீர்வரத்தாக உள்ளது.
நேரடி பாசன நிலங்கள் இல்லாத போதிலும், மழைக் காலங்களில் தேங்கும் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதற்காக இக்குளம் அமைக்கப்பட்டுள்ளது
இப்பகுதியைச் சுற்றிலும் வாழை, தென்னை, மா, இலவமரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளின் தாகத்தை தீர்க்கவும் இக்குளம் பயன்பட்டு வருகிறது. சமீபத்தில் பெயரளவில் சீரமைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கன மழையால் இக்குளம் நிரம்பியது.
கரையின் ஒரு பகுதி உடையும் அபாய நிலை ஏற்பட்டது. உடனடியாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்து நடவடிக்கை எடுத்தனர்.
இருந்த போதிலும் இதனை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெட்டுக்காடு பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.