ஒழுங்கு முறை விற்பனை வளாகத்தில் பூட்டி வைக்கப்பட்ட எடை மேடை
கம்பம் : கம்பம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை அலுவலக வளாகத்தில் அதிகாரிகள் அலட்சிய போக்கால் எடை மேடை நிலையம் பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது
இந்த அலுவலக வளாகத்தில் விவசாயிகள் தங்களின் வேளாண் விளை பொருட்களை இருப்பு வைத்து, விற்பதற்கு குளிரூட்டப்பட்ட கிட்டங்கிகள், மின்னணு வேளாண் சந்தை, தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை அலுவலகங்கள் உள்ளன. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் முன், எடை மேடை நிலையம் அமைக்கப்பட்டது.
தினசரி பயன்பாட்டில் இருந்த எடை மேடை நிலையத்தை திடீரென பூட்டி விட்டனர். என்ன காரணத்திற்காக பூட்டினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், அருகில் உள்ள தனியார் எடை மேடை நிலையம் நன்றாக செயல்படுகிறது. ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து அமைக்கப்பட்ட எடை மேடை நிலையத்தை பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர்.
இந்த வளாகத்தில் இருந்து வாழை, திராட்சை நெல் மூடைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, வெளியில் உள்ள தனியார் எடைமேடைகளில் எடை பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து ஆரம்பிக்கப்பட்ட இந்த எடைமேடையை சுற்றிச் செடி கொடிகள் வளர்ந்து புதர்களாக காட்சி தருகிறது. பயன்படுத்தாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ள எடைமேடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.