உள்ளாட்சி தேர்தலுக்காக ஊராட்சிகள் பிரிக்கும் பணி அமைச்சர் பெரியசாமி தகவல்
தேனி: ”உள்ளாட்சி தேர்தலுக்காக ஊராட்சிகள்,ஒன்றியங்களை பிரிக்கும் பணி நடந்து வருகிறது’ என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.
வைகை அணையை பார்வையிட்ட அமைச்சர் பெரியசாமி, பின் தேனியில் நடந்த துறையின் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
அவர் கூறிதாவது: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூல வைகை, முல்லைப் பெரியாற்றில் தற்போது வரும் அளவிலேயே ஆறு நாட்கள் தண்ணீர் வந்தால் வைகை அணை முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்புள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி முன் அறிவிப்பு இன்றி திறந்து விடப்பட்டதால், 15 நாட்கள் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. சாத்தனுார் அணை 4 முறை அறிவிப்பு வெளியிடப்பட்டு திறக்கப்பட்டது. சிலர் அரசியலுக்காக பேசுகின்றனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி முல்லைப்பெரியாறில் பணிகள் மேற்கொள்ள தமிழகத்திற்கு உரிமை, முழு சட்ட பாதுகாப்பும் உள்ளது. கூட்டணி என்பது வேறு. அரசு என்பது வேறு. இது தமிழகத்தின் ஜீவாதார உரிமை. தென் மாவட்ட மக்களின் உரிமையை முதல்வர் விட்டுத்தர மாட்டார். முழு கொள்ளளவை உயர்த்துவதற்கு முயற்சித்து வருகிறார். பேபி அணையை பலப்படுத்துவோம். அது தி.மு.க., ஆட்சியில் நடக்கும். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக ஊராட்சிகள், ஒன்றியங்கள் பிரிக்கும் பணி நடந்து வருகின்றன என்றனர்.