இரு நாட்களில் இரட்டிப்பான மிளகாய் ஒரு வாரத்தில் தக்காளி விலை சரிவு
தேனி : தேனியில் தக்காளி விலை ஒரே வாரத்தில் பாதியாக சரிந்த நிலையில், சில்லரை விற்பனையில் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையானது. அதே நேரம் பச்சை மிளகாய் விலை இருநாட்களில் இருமடங்கு உயர்ந்து கிலோ ரூ.90 வரை விற்பனையானது.
மாவட்டத்தில் கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ.50 வரை விற்பனையானது. தக்காளி மட்டும் இன்றி, ஒரு சில காய்கறிகளின் விலையும் அதிகரித்திருந்ததால் இல்லத்தரசிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் தேனி உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை மட்டும் விற்பனையானது.
திடீர் உயர்வு
அதே போல் அனைத்து வகை உணவுகளிலும் காரத்திற்காக பச்சை மிளகாய் பயன்படுத்து கின்றனர். உழவர் சந்தையில் டிச.13ல் ரூ.40க்கு விற்பனையான பச்சை மிளகாய், நேற்று ரூ.80க்கு விற்பனையானது.
இதுபற்றி வேளாண் விற்பனைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. அதே நேரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
மழை பெய்ததால் மூன்று நாட்களாக காய்கறிகள் வரத்து குறைவாக இருந்ததால் விலை உயர்வு இருந்தது. வரும் நாட்களில் மழை பெய்யாதிருந்தால் விலை குறைய வாய்ப்புள்ளது., என்றனர்.