சபரிமலையில் 22.67 லட்சம் பேர் தரிசனம் வருமானம் ரூ.163.89 கோடி
சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி. எஸ். பிரசாந்த் கூறியதாவது: சபரிமலையில் கடந்த 29 நாட்களில் 22 லட்சத்து 67 ஆயிரத்து 956 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே கால அளவில் 18 லட்சத்து 16 ஆயிரத்து 913 பேர் தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 4. 51 லட்சம் அதிகமாகும்.
மொத்த வருமானம் 163 கோடியே 89 லட்சத்து 20 ஆயிரத்து 204 ரூபாய். கடந்த ஆண்டு 141 கோடியே 12 லட்சத்து 97 ஆயிரத்து 723 ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 22.76 கோடி ரூபாய் அதிக வருமானம் வந்துள்ளது.
அரவணை விற்பனையில் 82 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 17 கோடி ரூபாய் அதிகமாகும். காணிக்கையாக 52.27 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட ஒன்பது கோடி ரூபாய் அதிகமாகும்.