பெரியாற்றை கடந்து செல்ல பாலம் அமைத்து தர மலை கிராம மக்கள் மனு
தேனி: சொக்கன் அலை மலைகிராம மக்கள் பெரியாற்றை கடந்து செல்ல கம்பி பாலம் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதாஹனீப், கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 215 மனுக்கள் கூட்டத்தில் வழங்கப்பட்டன.
பெரியகுளம் குளக்கரை, சோத்துப்பாறைரோடு பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் குமரேசன் தலைமையில் வழங்கிய மனுவில், ‘அப்பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்து, கூலிவேலைக்கு செல்கின்றோம். இரு மாதங்களுக்கு முன் நீர்நிலை புறம்போக்கு, வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் காலி செய்ய நோட்டீஸ் வழங்கினர்.
அதே பகுதியில் மாற்று இடம் வழங்க கோரினர். பெரியகுளம் தாலுகா, அம்மாபட்டி பொதுமக்கள் ராஜா தலைமையில் வழங்கிய மனுவில், ‘அம்மாபுரம் கிராம கழிவு நீரை எங்கள் கிராமத்திற்குள் செல்லும் வகையில் பணிகள் நடக்கிறது.
கழிவு நீர் வாய்காலை வேறு பக்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரினர்.’
சொக்கன்அலை கிராமத்தை சேர்ந்த மாநில பழங்குடியினர் நல குழு உறுப்பினர் சங்கிலி மனுவில், ‘பட்டூர், படப்பன்பாறை, வட்டி வழுந்தான் காடு போன்ற பகுதிகளுக்கு பெரியாற்றை கடந்து செல்லும் நிலை உள்ளது.
மழைகாலங்களில் ஆற்றை கடந்து செல்வதில் சிரமம் உள்ளது. ஆற்றில் கம்பி பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என’, கோரினர்.
கடன் வழங்காமல் அலைகழிப்பு: ஆண்டிபட்டி தாலுகா கோவில்பாறை பச்சையப்பபுரம் கனகா மனுவில், ‘மக்களுடன் முதல்வர் முகாமில் தாட்கோ மூலம் கடன் கேட்டு விண்ணப்பித்தேன். எனது மனு வருஷ நாட்டில் உள்ள தேசிய மயாக்கப்பட்ட வங்கிக்கு அனுப்பபட்டது.
ஆனால், வங்கி கடன் வழங்காமல் 5 மாதங்களாக அலைக்கழிக்கின்றனர். வங்கி கடன் வழங்க பரிந்துரைக்க வேண்டும்,’என்றார்.
மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் கருப்பையா மனுவில், ‘மருத்துவ முகாம்களில் முறையாக அரசின் விதிகளை செயல்படுத்தவில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்த திட்டங்கள் காலதாமதமாக செயல்படுத்தப்படுகிறது. மாற்றத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
மாவட்ட அலுவலரை மாற்ற வேண்டும்’, உள்ளிட்ட கோரினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டமும் நடந்தது.