வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிப்பு
ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வைகை அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து உள்ளது. கடந்த சில மாதங்களாக வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் டிச., 12ல் நிறுத்தப்பட்டது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பேரணை முதல் கள்ளந்திரி வரை உள்ள 2ம் போக பாசன நிலங்களுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் கால்வாய் வழியாக டிச., 18 ல் மீண்டும் நீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 1630 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை, தேனி, ஆண்டிபட்டி – சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேற்றப்படுகிறது. நேற்று காலை அணை நீர்மட்டம் 64.30 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2136 கன அடியாக இருந்தது.