மாமியாரை கொலை செய்த மருமகன் கைது; வாக்கு மூலம்
தேனி:தேனி மாவட்டம், அல்லிநகரம் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் லீலாவதி, 36,. இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவரது மகள் கவுசல்யா, 20, என்பவருக்கும், திண்டுக்கல் மாவட்டம், கொழிஞ்சிபட்டியைச் சேர்ந்த பிச்சைமுத்து, 26, என்பவருக்கும் கடந்த மார்ச் 20ல் திருமணம் நடந்தது.
மதுவுக்கு அடிமையான பிச்சைமுத்து, கவுசல்யாவை தாக்கி துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், லீலாவதி வீட்டிற்கு ஆறு மாதங்களுக்கு முன் கவுசல்யா வந்து விட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முகத்தை மூடியபடி வந்த நபர், லீலாவதியை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பினார். லீலாவதி வீட்டின் எதிரே இருந்த கண்காணிப்பு கேமரா பதிவில், பிச்சைமுத்து வீட்டிற்குள் வந்து கொலை செய்து தப்பியது பதிவாகியிருந்தது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பதுங்கியிருந்த பிச்சைமுத்துவை பிடித்து, அல்லிநகரம் போலீசார் விசாரித்தனர்.
பிச்சைமுத்து வாக்குமூலத்தில் கூறுகையில், “மனைவியுடன் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்தோம். மனைவி கவுசல்யாவுக்கு மாமியார் லீலாவதி அறிவுரை கூறாமலும், என்னுடன் அனுப்பி வைக்க மறுத்ததாலும் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன்,” என்றார்.
இதையடுத்து, கொலை வழக்கில் பிச்சைமுத்துவை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.