போலி ஜாதி சான்றிதழ் வழங்கிய ஊராட்சி தலைவர் மீது வழக்கு
தேவதானப்பட்டி:பட்டியலின சமுதாயம் என, போலி ஜாதி சான்றிதழ் வழங்கி, தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டி ஊராட்சித் தலைவராக, 5 ஆண்டுகள் பதவி வகித்த முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெரியகுளம் ஒன்றியம் ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி 2020ல் பட்டியலின பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டது. இவ்வூரை சேர்ந்த பழனிசாமி மனைவி மகேஸ்வரி, 42, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதை மறைத்து, பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் என போலி ஜாதி சான்றிதழை வழங்கி வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த, ஜி.கல்லுப்பட்டி பாத்திமாநகர் முனியாண்டி மனைவி சின்னத்தாய், 32, தோற்றார். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மகேஸ்வரிக்கு எதிராக சின்னத்தாய் வழக்கு தொடர்ந்தார்.
கலெக்டர் விசாரணையில் ஜாதி சான்றிதழ் போலி என கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, 2023 மே மாதம் ஊராட்சி தலைவர் மகேஸ்வரியின், செக் பவர் பறிக்கப்பட்டது. மகேஸ்வரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஊராட்சி தலைவர் பதவியில் 5 ஆண்டுகள் இருந்தார்.
இந்நிலையில், பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளையும், சலுகைகளையும் அபகரிக்கும் எண்ணத்துடன் செயல்பட்ட மகேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சின்னத்தாய் புகாரில், தேவதானப்பட்டி போலீசார் மகேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றன