பாசி படர்ந்த தரைப் பாலத்தில் பெரிய பாலம் அமைக்க வலியுறுத்தல் : வழுக்கி விழும் அவலம்
கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை அருகே நரியூத்து ஊராட்சிக்குட்பட்ட பின்னத்தேவன்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள பெரிய ஓடையில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. உப்புத்துறை, கருப்பையாபுரம் பகுதியில் பெய்த மழையால் பெரிய ஓடையில் கடந்த சில மாதங்களாக நீர் வரத்து தொடர்ந்து உள்ளது.
தரைப்பாலம் முழுவதும் பாசிகள் வளர்ந்துள்ளது. கடந்து செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ஆகியவை பாசிகளால் வழுக்கி தடுமாறி விபத்து ஏற்படுகிறது. இரவில் அதிக விபத்து ஏற்படுகிறது. பின்னத்தேவன்பட்டி கிராமத்தை கடந்து உப்புத்துறை, ஆட்டுப்பாறை, ஊத்துக்காடு, கருப்பையாபுரம், பாம்பாடும்பாறை, புதூர் உள்ளிட்ட பல மலைக் கிராமங்கள் உள்ளன. பொதுமக்கள் டூவீலர்கள், ஆட்டோக்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
தரைப்பாலத்தில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மாற்றுப்பாதை வழியாக சுற்றி செல்கின்றனர். வழுக்கு பாலத்தில் விபத்துக்களால் பெரிய பாதிப்பு ஏற்படும் முன்பு இப்பகுதியில் வளர்ந்துள்ள பாசிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.