குண்டும் குழியுமான ரோடு; பல ஆண்டுகளாக சீரமைக்காததால் சிரமம் மணியம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பு
போடி: போடி ஒன்றியம், மணியம்பட்டி ஊராட்சியில் குண்டும்,குழியுமான ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்காததால் சிரமம் அடைகின்றனர். மேலும் இங்கு அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அல்லாடுகின்றனர்.
மணியம்பட்டி ஊராட்சி, இந்திரா காலனி நடுத்தெரு, தெற்குதெரு, ஊராட்சி அலுவலகம் ரோடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன. உப்புக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஊராட்சி அலுவலகம், ஒண்டிவீரப்பசாமி கோயில் அருகே உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி கீழ் பகுதியில் பைப் லைன் சேதம் அடைந்து பல மாதங்கள் ஆகியும் சீரமைக்காததால் குடிநீர் வீணாக செல்கிறது. ஊராட்சி அலுவலகம் அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கான புது வாழ்வு கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. பல ஆண்டுகள் ஆன நிலையில் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து பயன்பாடு இன்றி உள்ளது.
இந்திரா காலனி செல்லும் ரோட்டில் விபத்து ஏற்படும் நிலையில் சாக்கடை சிறு பாலம் சேதம் அடைந்து உள்ளது. பல இடங்களில் தெருவிளக்கு இல்லாமல் உள்ளது. ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை
சாக்கடை சிறு பாலம் சேதம்
மாரியம்மாள், மணியம்பட்டி : இந்திரா காலனி தெற்கு தெருவில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சாக்கடை சிறுபாலம் சேதம் அடைந்து கம்பிகள் நீட்டிய நிலையில் உள்ளது. 6 மாதங்களுக்கு மேலாகியும் பாலம் சீரமைக்காமல் உள்ளன. நூலக கட்டடத்தில் புத்தகங்கள் மாயமானதால் தற்போது ஊராட்சி அலுவலகமாக செயல்படுகிறது.
தெருக்களில் சாக்கடை தூர்வாராதால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சீராக செல்ல வழி இன்றி தேங்கி கிடக்கிறது. சேகரமாகும் குப்பைகளை தெற்குதெரு அருகே உள்ள ஓடையில் கொட்டுகின்றனர். இதனால் கொசு உற்பத்தி ஏற்படுகிறது. சேதம் அடைந்த சாக்கடை சிறு பாலத்தை சீரமைத்திட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோடு வசதி தேவை
பாண்டி,மணியம்பட்டி: மணியம்பட்டியில் இருந்து ஒண்டிவீரப்ப சாமி கோயில் செல்லும் பாதையில் ரோடு அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சீரமைப்பு பணிமேற்கொள்ளாததால் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ரோட்டில் மக்கள் நடந்து, டூவீலர், உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதனால் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வர சிரமம் அடைந்து வருகின்றனர்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பு கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம் கட்டப்பட்டு 10 ஆண்டுகளாகியும் பயன்பாடு இன்றி சேதம் அடைந்து வருகிறது. இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி உள்ளது. ரோட்டை சீரமைத்து, ஊராட்சி சேவை மைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.