குடும்ப நலத் துறை துணை இயக்குநர் எச்சரிக்கை : கருத்தடை மருந்து டாக்டர் பரிந்துரை இன்றி விற்றால் நடவடிக்கை
இந்தியா முழுவதும் கர்ப்பத்தை கலைக்க கருத்தடை மருந்துகள் எடுத்துக் கொள்ளும் 10 பெண்கள் தினமும் இறக்கின்றனர். மருந்து கடை நடத்துபவர்கள் டாக்டர்களின் பரிந்துரை சீட்டுகள் இல்லாமல் மருந்துகள் தரப்படுகிறது.
இதை தடுக்க குடும்ப நலத்துறை ‘ஆக்சன் பிளான்’ தயாரித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்துக்கடை உரிமையாளர்களையும் அழைத்து குடும்ப நலத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் துணை இயக்குநர் அன்புச்செழியன், மதுரை மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் சசி, தேனி மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ரேகா ஆகியோர் பங்கேற்று, டாக்டர் பரிந்துரை இன்றி மருந்துகள் வழங்கப்படுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கினர்.
இக் கூட்டத்தில் பேசிய துணை இயக்குநர், கருத்தடை மருந்துகளை, கருத்தடை செய்வதற்கான தகுதி பெற்ற டாக்டர்களின் உரிய பரிந்துரை சீட்டு இல்லாமல் , கருத்தடை மருந்துகளை விற்பனை செய்ய கூடாது.
மீறி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மருந்து கடையின் உரிமம் ரத்து செய்யப் படும். அத்துடன் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த கூட்டத்தில் தனியார் கிளினிக்குள் மற்றும் நர்சிங் ஹோம்களில் நடத்தப்படும் மருந்துக்கடை மேற்பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். மைனர் திருமணங்கள் செய்தும், திருமணமாகி இல்லற வாழ்க்கையில் உள்ளவர்களும் சில சமயம் உரிய பரிசோதனைகள் செய்யமல் , கர்ப்பங்களை கலைக்க முற்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என துணை இயக்குனர் தெரிவித்தார்;