நடவு செய்து ஒரு மாதமானதால் அதிர்ச்சி : வளர்ச்சி குன்றியதால் நெல் விவசாயிகள் தவிப்பு
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் 2ம் போக நெல் பயிர் நடவு செய்து ஒரு மாதம் கடந்த பின்பும், பயிர் வளர்ச்சி இல்லாமல், நடவு செய்த நிலையிலேயே இருப்பதால், விவசாயிகள் அதிர்ச்சியில் தவித்து வருகின்றனர். இதனால் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நடக்கிறது. லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை நெல் சாகுபடி வயல்கள் உள்ளன. முதல் போக நெல் சாகுபடி ஜூனில் துவங்கி செப்டம்பரில் அறுவடை செய்வர். பின் 2ம் போகம் நவம்பரில் துவங்கி பிப்ரவரி வரை நடக்கும். தற்போது 2ம் போகம் நெல் பயிர் நடவு செய்து சில பகுதிகளில் ஒரு மாதமும், சில பகுதிகளில் 2 வாரங்களாகிறது.
இரண்டாம் போகத்தில் கம்பம் வட்டாரத்தில் தனியார் கடைகளில் ஆர்.என்.ஆர். என்ற வீரிய ஒட்டு ரகத்தை பயிரிட்டு உள்ளனர். நடவு செய்த வயல்களில் ஒரு மாதமாகியும் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. நடவு செய்த நாளில் எப்படி இருந்ததோ அப்படியே உள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர். இந்த ரகம் முதல் போகத்தில் நல்ல மகசூல் தந்ததால், விவசாயிகள் அதே ரகத்தை மீண்டும் சாகுபடி செய்தனர்.
இதுகுறித்து கம்பம் விவசாய சங்க செயாளர் சுகுமாறன் கூறுகையில், ‘நடவு செய்து ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ளது. பயிரின் வளர்ச்சி இல்லாமல் உள்ளது.
இத்தனைக்கும் மூன்று முறை பூச்சி மருந்து தெளித்து விட்டோம். பலன் இல்லை. வேளாண் துறை வழங்கிய என்.எல்.ஆர். ரகம் நன்றாக உள்ளது. ஆனால் கடையில் வாங்கிய ஆர்.என்.ஆர் ரகம் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளது.’, என்றார். கடந்த முதல் போகத்தில் ஆர்.என்.ஆர். ரகத்திற்கு நல்ல விலை கிடைத்ததால், விவசாயிகள் 2ம் போகத்திற்கும் அதே ரகத்தை தேர்வு செய்து உள்ளனர்.
கம்பம் துணை வேளாண் அலுவலர் குணசேகரன் கூறுகையில், ‘துறை சார்பில் வழங்கிய எல்.என்.ஆர். ரகம் எந்த பிரச்னையும் இல்லை. தனியார் கடைகளில் வாங்கிய ஆர்.என்.ஆர். ரகத்தில் வளர்ச்சி இல்லை என்ற தகவல் எங்களுக்கு வரவில்லை. இருந்த போதும் ஆய்வு செய்து அதற்குரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குகிறோம்.’, என்றார்.