Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

மோசடி கும்பலுக்கு இரையாகும் ‘கேம்’ விளையாடும் இளைஞர்கள் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

தேனி: ஆன்லைன் கேம் விளையாடும் இளைஞர்களை டிஜிட்டல் மோசடி கும்பல் வழக்குகளில் சிக்க வைப்பது அதிகரித்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்

தமிழகத்தில் நடக்கும் பல டிஜிட்டல் மோசடிகளில் படித்தவர்கள் ஏமாறுவது தொடர்ந்து வருகிறது. மற்றொரு புறம் பணத்திற்கு ஆசைப்பட்டு சிம் கார்டுகள், வங்கி கணக்குகளை விற்பனை செய்யும் அப்பாவி பட்டதாரிகள் போலீசில் சிக்குவதும் தொடர்கிறது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: தற்போது இளைஞர்கள் ஆன்லைனில் ‘கேம்’ விளையாடும் போது பல்வேறு தொடர்புகள் ஏற்படுகின்றன. இவ்வாறு கேம் விளையாடுபவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் வெவ்வேறு பெயர்களில் ‘டெலிகிராம்’ செயலி மூலம் தொடர்பு கொள்கின்றனர்.

இந்த செயலியில் அவர்களது ஐ.டி., பெயர் மட்டும் தெரியுமாறும், அலைபேசி எண் தெரியாதவாறும் வைக்கின்றனர். விளையாட்டில் பழகும் இளைஞர்களிடம் பண ஆசையை காட்டி சிம் கார்டு வாங்கிக் கொடுக்க கூறுகின்றனர். இதனை குறிப்பிட்ட முகவரிகளுக்கு அனுப்பக்கூறி பணம் வழங்குகின்றனர். சிலர் வங்கி கணக்கு துவங்கி, அதன் விபரங்கள், கணக்குடன் இணைக்கப்பட்ட சிம்கார்டுகளை அனுப்பி பணம் பெறுகின்றனர்.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் சிம் கார்டுகள், வங்கி கணக்குகள் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தமிழகத்தில் உள்ளவர்களிடம் டிஜிட்டல் மோசடி செய்ய பயன்படுத்தப்படுகின்றன. ஏமாறுபவர்கள் அளித்த புகாரில் விசாரணை செய்தால் சிம்கார்டுகள், வங்கி கணக்குகளை விற்பனை செய்தவர்கள் தொடர்ந்து சிக்குகின்றனர். இவற்றை வாங்கி கொடுக்க பல ஏஜென்டுகள் செயல்படுவது தெரியவந்துள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *