Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

18ம் கால்வாய் கரை உடைப்பால் தண்ணீர் வீணாகிறதே 44 கண்மாய்கள் நிரம்புவதில் சிக்கல்

கூடலுார்: கூடலுார் அருகே 18ம் கால்வாய் கரைப்பகுதி உடைப்பு ஏற்பட்டுள்ளதால் வீணாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் 44 கண்மாய்கள் முழுமையாக நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து 18ம் கால்வாயில் பாசனத்திற்காக டிச.21ல் தண்ணீர் திறக்கப்பட்டது. கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 47 கி.மீ., தூர இக்கால்வாய் மூலம் 4615 ஏக்கர் நேரடி பாசனம் நடைபெறுகிறது. மேலும் 44 கன்மாய்கள் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மானாவாரி சாகுபடி நிலங்களுக்கு பயன்படுகிறது.

நீர் திறப்புக்கு முன்பு கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றி கரைப்பகுதி சீரமைக்க விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கடந்த ஆண்டு தண்ணீர் திறந்தவுடன் தலைமதகு, தொட்டிப் பாலம் உள்ளிட்ட பகுதியில் கரைப்பகுதி உடைப்பு ஏற்பட்டது. தண்ணீர் நிறுத்தப்பட்டு மணல் மூடைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைப்பு பணி செய்த பின் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால் கடைமடை வரை கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமலும், கண்மாய்கள் நிரம்பாமலும் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே கரைப்பகுதிகள் சீரமைக்கப்பட்ட பின் தண்ணீர் திறக்க வலியுறுத்தப்பட்டது. இதைக் கண்டு கொள்ளாமல் தண்ணீர் திறக்கப்பட்டது.

கூடலுார் அருகே தம்மனம்பட்டி கழுதைமேடு ரோட்டின் இணைப்பு பாலம் அருகே கால்வாயின் கரைப்பகுதி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இது தவிர மேலும் பல இடங்களில் நீர்க் கசிவு ஏற்பட்டு வெளியேறி வருகிறது. பல இடங்களில் இப்பிரச்னையால் 44 கண்மாய்கள் முழுமையாக நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தண்ணீரை நிறுத்தி சீரமைப்பு பணிகள் செய்தால் கடைமடை வரை இந்த ஆண்டும் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படும். அதனால் போர்க்கால அடிப்படையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மணல் மூடைகளை அடுக்கி சீரமைக்க நீர்வளத் துறையினர் முன்வர வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *