வெளிநாடுகளில் காலநிலை மாற்றத்தால் உற்பத்தி பாதிப்பு : காபி விளைச்சலும், விலையும் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
போடி: தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் காபி விளைச்சல் மட்டும் இன்றி விலையும் உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் போடி அருகே குரங்கணி, முட்டம், முதுவாக்குடி, பிச்சாங்கரை, போடிமெட்டு, வடக்குமலை, அகமலை பகுதியில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காபி பயிரிடப்பட்டு இருந்தன. காபி பழம் எடுக்கும்கூலிக்கு கூட விலை கட்டுபடியாகாததால் காபி பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டி உள்ளனர்.
ஏலக்காய்க்கு நல்ல விலை உள்ளதால் காபி செடிகளை அழித்து ஏலம் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் காபி உற்பத்தி தற்போது 20 ஆயிரம் ஏக்கராக குறைந்தது. அக்., நவ., டிச., ஜன.,மாதங்கள் காபி சீசனுக்கு உரிய காலமாகும்.
இங்கு உற்பத்தியாகும் காபி பெல்ஜியம், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி, பெருமாள்மலை உள்ளிட்ட பகுதியில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு காபி விளைச்சல் அதிகரித்து உள்ளது.
தற்போது பிரேசில், வியட்நாம் நாடுகளில் ஏற்பட்டு உள்ள கால நிலை மாற்றத்தால் காபி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இங்கு விளையும் காபிக்கு மவுசு அதிகரித்து, விலையும் அதிகரித்து உள்ளது.
கடந்த ஆண்டு காபி ஒரு உருளை கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரையும், அரபி தளர் கிலோ ரூ.280 முதல் ரூ.295 வரையும், அரிசி கிலோ ரூ.390 முதல் ரூ.400 வரையும் இருந்தது.
இந்த ஆண்டு காபி உருளை கிலோ ரூ.200 முதல் ரூ.220 வரையும், அரபி தளர் கிலோ ரூ.400 முதல் ரூ.420 வரையும், அரிசி கிலோ ரூ.490 முதல் ரூ.500 ஆக உயர்ந்து உள்ளது.
விவசாயிகள் கூறும் போது: கடந்த ஆண்டு வரை காபிக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் சாகுபடி பரப்பு குறைந்து காபி உற்பத்தியும் குறைந்து உள்ளது. இந்த ஆண்டு காபி விளைச்சலும், விலையும் உயர்ந்து உள்ளதால் காபி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.