சில்வார்பட்டி ஊராட்சியில் விவசாயிகள் அவதி : கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் கைவிடப்பட்ட பாலப்பணி
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி ஊராட்சி அணை ஓடையில் கட்டப்பட்ட பாலம் பணியின் போது கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விளை நிலங்களுக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.
சில்வார்பட்டி ஊராட்சியில் நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, சமத்துவபுரம், தர்மலிங்கபுரம், கதிரப்பன்பட்டி உட்கடை கிராமங்களை உள்ளடக்கியது. 12 வார்டுகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
ஊராட்சிக்கு வைகை அணை, வடுகபட்டி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 3.50 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் குடிநீர் வடிகால் வாரியம் ஒரு லட்சம் லிட்டர் மட்டுமே வழங்குகிறது.
ஆனால் தற்போது 5.50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. சிறுகுளம் கண்மாயில 14 போர்வெல் அமைத்து உவர்ப்பு நீர் இரு நாட்களுக்கு ஒரு முறை, மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குகிறது.
ஊராட்சியில் குடிநீர் ஆதாரங்கள் இருந்தும் செயற்கையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.
தாகத்தில் தவிக்கும் மாணவர்கள்
இங்குள்ள மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 1800 மாணவர்கள் படிக்கின்றனர். மாதிரி பள்ளியாக இருந்தாலும் இங்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதி இல்லை.
சமீபத்தில் நபார்டு திட்டத்தில் ரூ.6.75 கோடியில் 30 வகுப்பறைகள், இரு அறிவியல் ஆய்வகம் கட்டப்பட்டது. பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டதின் பேரில் 14 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை தொட்டி கட்டிதருவதாக கூறிவிட்டு கடைசிவரை கட்டித்தரவில்லை.
தற்போதுள்ள 7 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தொட்டி மட்டுமே உள்ளது. இந்த குடிநீர் மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. சில நாட்கள் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் சப்ளை செய்வதில் வீம்பு காட்டுவதாக பள்ளி நிர்வாகத்தினர் புலம்புகின்றனர். இதனால் மாணவர்கள் ஒவ்வொருவரும் 2குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரும் அவலம் நிலவுகிறது.
அரைகுறையாக முடங்கிய பாலப்பணி
அழகேசன்,விவசாயி, சில்வார்பட்டி: முருகமலையிலிருந்து வரும் மழை நீர், தண்ணீர் பந்தல் வழியாக, அணை ஓடை இருந்து வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்கிறது. சில்வார்பட்டி அணை ஓடையை நிலங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சென்று வருகின்றனர். நிலத்தை உழுவதற்கு மாடுகளையும் அழைத்துச் செல்கின்றனர்.
மழை காலங்களில் இந்த ஓடையில் அதிகளவில் தண்ணீர் செல்லும். இதனால் ஓடையை கடப்பதற்கு பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை இருந்தது. இதன் பேரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை
திட்டத்தில் 2022ல் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுமானப்பணி துவங்கியது. ஓடையின் நடுவே நான்கு பில்லர்கள் கட்டப்பட்ட நிலையில் என்ன காரணமோ பாலம் கட்டுமானப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மழை காலங்களில் சிரமப்படுகின்றனர்.
தண்ணீர் வசதி இல்லாத சுகாதார வளாகம்
சிவலிங்கம், விவசாயி, சில்வார்பட்டி–: கோம்பைபிள்ளை தெருவில் பேவர் பிளாக் ரோடு வசதி செய்யவில்லை. வர்டுகளில் சாக்கடை தூய்மை இல்லை. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து மக்கள் அவதிப்படுகின்றனர்.
துணை சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு மது பாராக பயன்படுத்துகின்றனர். சொசைட்டி தெருவில் தெருவிளக்கு இல்லை. கிழக்கு ஓடைத்தெரு அருகே பெண்கள் சுகாதார வளாகம், சுடுகாடு அருகே ஆண்கள் சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதி, மின் விளக்கு வசதி இல்லாததால் சுகாதார வளாகம் பராமரிப்பின்றி கிடக்கிறது.
பன்றிகளால் தொல்லை
கண்ணன், டிரைவர், சில்வார்பட்டி: சில்வார்பட்டி பகுதியில் பன்றிகள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
குடிநீர் வடிகால் வாரியம் வழங்கும் குடிநீர், சிறுகுளம் கண்மாயில் போர்வெல் மூலம் பெறும் குடிநீர் இரண்டையும் கலந்து வினியோகிப்பதால் குடிநீர் குடிப்பதற்கு உகந்ததாக இருக்கும். தற்போது போர்வெல் நீரை மட்டும் சப்ளை செய்வதால் அதிக உவர்ப்பு நீராக உள்ளது. இந்த நீரை குடிக்க முடியவில்லை.
குப்பை கிடங்கு கட்ட இடம் கேட்டுள்ளோம்
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அணை ஓடை பகுதியில் பாலத்தினை பெரியகுளம் ஒன்றியம் ரூ.27 லட்சத்திற்கு டெண்டர் விட்டு பணிகள் நடந்தது. கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் ஒப்பந்ததாரர் ரூ.33 லட்சம் கேட்கிறார்.
ரூ.6 லட்சம் வித்தியாசத்தில் பாலப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திட்ட அலுவலர், பி.டி.ஓ., ஆகியோர் விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தர்மலிங்கபுரத்தில் 4 ஏக்கர் தரிசு நிலம் வருவாய்த்துறையில் கேட்டுள்ளோம்.
நிலம் கொடுத்தால், குப்பை கிடங்கு கட்ட உதவியாக இருக்கும் என்றார்.