அறிவுசார் நுாலகம் பயன்பாட்டிற்கு வருமா வாசகர்கள் எதிர்பார்ப்பு
சின்னமனுார்: சின்னமனுார் நகராட்சியில் ரூ.2 கோடியே 6 லட்சம் மதிப்பில் அறிவுசார் நுாலகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் வாசகர்கள், பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.’ என, கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நகராட்சியில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான புத்தகங்களை கொண்ட அறிவுசார் நுாலகம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது. கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் முயற்சியில் இந்த நூலகம் அமைக்க அனுமதி கிடைத்தது.
மத்திய அரசின் தேர்வாணையம் நடந்தும் இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, வனவியல் பணி உள்ளிட்ட தேர்வுகளுக்கும், மாநில அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த நுாலகம் அமைக்கப்படுகிறது.
இந்த நுாலகத்தில் அனைத்து வகையான நுால்களும் இடம் பெற்றுள்ளன. இதற்கான பூமி பூஜை கடந்த 2022 செப்டம்பரில் நடந்து, பணிகள் துவங்கியது. அப்பணிகளை துவக்கி 2 ஆண்டுகளை கடந்து, தற்போது நிறைவு பெற்றுள்ளது.
அறிவுசார் நுாலக கட்டடப் பணிகள் நிறைவு பெற்றதால், பொது மக்கள் பயன்படுத்த நகராட்சி சார்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சின்னமனுார் நகராட்சி கமிஷனர் கோபிநாத்தை தொடர்பு கொண்ட போது, பதிலளிக்கவில்லை.