வனத்துறை அறிக்கை : சந்தன கட்டை கடத்தலில் வக்கீலுக்கு தொடர்பு
மூணாறு: சந்தன கட்டை கடத்தலில் வக்கீல் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக வனத்துறை தாக்கல் செய்த ‘ரிமாண்ட்’ அறிக்கையால் அதிர்ச்சி ஏற்பட்டது.
இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே மறையூரில் சந்தன மரங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவற்றை வெட்டி கடத்துவது தொடர்கதையாகி வருகிறது. அது போன்று மறையூர் சந்தன டிவிஷனுக்கு உட்பட்ட இல்லிக் காடு பகுதியில் இருந்து நான்கு சந்தன மரங்கள் நவ.6ல் மாயமாகின. அவற்றை வெட்டி கடத்தியதாக கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து பேரை மறையூர் வனத்துறையினர் ஏற்கனவே கைது செய்த நிலையில் மறையூர் பாறைபட்டியைச் சேர்ந்த சுரேஷை 38, டிச.23ல் கைது செய்தனர்.
தேவிகுளம் சப் ஜெயிலில் ரிமாண்ட் செய்வது தொடர்பாக மறையூர் வனத்துறை அதிகாரி தேவிகுளம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் வக்கீல் ஒருவருக்கு கடத்தலில் தொடர்பு இருப்பதாக கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் வக்கீல் ஒருவர் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். தவிர மறையூரில் இருந்து கடத்தப்படும் சந்தன கட்டைகள் தமிழகத்தில் உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, திருப்பூர், புதுகோட்டை, சென்னை ஆகிய பகுதிகளை மையப்படுத்தி விற்பனை நடக்கிறது. பெரும் கும்பல் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே சுரேஷூக்கு ஜாமின் வழங்க கூடாது என, கூறப்பட்டுள்ளது.