சக்கம்பட்டி பஸ் ஸ்டாப்பில் 24 மணி நேரமும் குடிநீர் வசதி
ஆண்டிபட்டி : டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி சத்யா நகர் சக்கம்பட்டி ஆலமரம் பஸ் ஸ்டாப்பில் 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி பேரூராட்சி, டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி பகுதிகள் இணையும் இப்பகுதி நகர் பகுதியாக வளர்ந்து வருகிறது.
எந்நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் 2000 லிட்டர் கொள்ளளவு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி – சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்நேரமும் தொட்டியில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டி திறப்பு விழாவிற்கு டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி தலைவர் வேல்மணி தலைமை வகித்தார்.எம்.எல்.ஏ., மகாராஜன் புதிய குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் வரவேற்றார். நிகழ்ச்சிகளை வர்த்தக பிரமுகர் சேட்டுபரமேஸ்வரன் தொகுத்து
வழங்கினார்.
வார்டு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, தி.மு.க., நகர செயலாளர் சரவணன், இந்திய கம்யூ., நிர்வாகிகள் சென்றாயப்பெருமாள், முனீஸ்வரன்,பரமேஸ்வரன் பிச்சைமணி, சமூக ஆர்வலர்கள் வசந்தம் வேல்முருகன், அழகர்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.