Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

தேக்கம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி அவதி – வடிகால் வசதியின்றி கழிவுநீரில் மக்கள் நடந்து செல்லும் அவலம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் முறையான வடிகால் வசதியின்றி மக்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது. அடிப்படை வசதிகளை மேம்படுத்த பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த ஊராட்சியில் தேக்கம்பட்டி, முத்துரெங்காபுரம், சமத்துவபுரம், அடைக்கம்பட்டி, மீனாட்சிபுரம் ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. விவசாயம், கால்நடை வளர்ப்பு மட்டுமே தொழிலாக கொண்டுள்ள கிராமங்களில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.

ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் அந்தந்த கிராமங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் பல பிரச்சனைகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:

தெருவில் தேங்கும் கழிவுநீர்

செல்வீஸ்வரி, அடைக்கம்பட்டி: கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகளில் 700க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றோம். தெருக்களிலும் வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீர் பல இடங்களில் தேங்குகிறது.

அடைக்கம்பட்டி 4வது வார்டு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி கிழக்குத் தெருவில் மழைக்காலங்களில் அதிகளவு நீர் தேங்கி நிற்கிறது. மற்ற நாட்களில் தேங்கும் கழிவு நீர் மீதே நடந்து செல்ல வேண்டி உள்ளது.

குழந்தைகள் வயதானவர்களுக்கு சேற்றுப்புண் ஏற்படுகிறது. குடிநீர் போதுமான அளவில் கிடைக்கவில்லை. மேடான தெருக்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

பொதுக்கிணறு பாழடைந்து பாதுகாப்பின்றி புதர்மண்டி உள்ளது. கிணற்றில் குப்பையுடன் சேர்ந்த நீரால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை மூட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிப்பறை பற்றாக்குறை

அமிர்தராஜன், மீனாட்சிபுரம்: மீனாட்சிபுரத்தில் 300 வீடுகளில் 1000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்கு பொதுக்கழிப்பறை போதியளவு இல்லை.

இருபாலருக்கும் பொதுக்கழிப்பறை கட்ட போதிய இடவசதி உள்ளது. விநாயகர் கோயில் அருகில் உள்ள குழாய் பாலத்தில் அடைப்பு ஏற்படுவதால் மழைக்காலங்களில் மழை நீர், கழிவு நீர் ரோட்டில் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. இதனை அகற்றி கண் பாலம் அமைக்க வேண்டும். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது ஊராட்சி நடவடிக்கை எடுப்பதில்லை. கிராம சபையால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை.

பயணிகள் நிழற்குடை தேவை

ஏ.அமாவாசை, மீானட்சிபுரம்: பெண்களுக்கு கழிப்பறை வசதி பெரும் பிரச்சனையாக கிராமத்தில் உள்ளது. கிராமத்தைச் சுற்றி விவசாய நிலங்கள் இருப்பதால் ரோட்டின் ஓரங்கள் திறந்தவெளி கழிப்பிடமாகிறது.

இக்கிராமத்திற்கான சுடுகாடு பகுதிக்கு சுற்றுச்சுவர் இல்லை. சுடுகாட்டிற்கான இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது. பயணிகள் நிழற்குடைக்கான இடவசதி உள்ளது. ஆனால் நிழற்குடை அமைக்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.

கிராமம் வழியாகச் செல்லும் மழை நீர் வடிகால் தூர்வாரப்படாததால் புதர் மண்டி கிடக்கிறது. மழைநீர் அதிகமானால் தெருவுக்குள் வந்துவிடுகிறது. கால்வாயை தூர்வார வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை

வி.குருசாமி, முத்துரெங்காபுரம்: இக்கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை பிரச்சினையாக உள்ளது. வள்ளல் நதி கூட்டு குடிநீர் திட்டத்தில் கண்டமனூர் மெயின் ரோட்டில் இருந்து அடைக்கம்பட்டி, மீனாட்சிபுரம், தேக்கம்பட்டி வழியாக முத்துரெங்காபுரம் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் பாதித்துள்ளது.

முத்து ரெங்காபுரத்திற்கு செல்லும் பைப் லைன் மூலம் தண்ணீர் போதியளவு கிடைக்கவில்லை. நிலத்தடி நீரை பயன்படுத்துகின்றனர். மூல வைகை ஆற்றில் இருந்து மரிக்குண்டு, பாலசமுத்திரம் கண்மாய்களுக்கு செல்லும் துரைசாமிபுரம் கால்வாய் முத்துரெங்காபுரம் அரண்மனை கண்மாயை ஒட்டி செல்கிறது.

ஆனால் கால்வாய் நீரை கண்மாயில் தேக்க முடியவில்லை. இக்கிராம விவசாயிகள் தொடர்ந்து போராடியும் நடவடிக்கை இல்லை.

ரூபாய் ஒரு கோடிக்கு வளர்ச்சி பணிகள்

ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: முத்துரெங்காபுரம் குடிநீர் பிரச்சனைக்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

மீனாட்சிபுரத்தில் பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை அனுமதி பெற வேண்டி உள்ளது. ரூ.30 லட்சம் செலவாகும் அதற்கான நிதி ஊராட்சியில் இல்லை.

கடந்த சில ஆண்டுகளில் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளது. கிடைக்கும் அரசு நிதிக்கேற்ப அடுத்தடுத்த பணிகள் தொடரும்.

இவ்வாறு கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *