Thursday, April 17, 2025
மாவட்ட செய்திகள்

தங்கும் விடுதியில் மோதல்: சு ற்றுலா பயணிகள் 6 பேர் காயம்

மூணாறு, டிச.30: சுற்றுலா தலமான ராமக்கல்மேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், ஊழியர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராமக்கல்மேடு முக்கிய சுற்றுலா பகுதியாகும். இந்நிலையில் இங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 60 பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் இரவு அறை எடுத்து தங்கினர்.

அங்கு அறை ஒன்றில் மின்விசிறி ஓடவில்லை. அதனை குறித்து கேட்ட போது சுற்றுலா பயணிகள், விடுதி ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் அப்துல்சுக்கூர் (38), ஜீனத் (52), ஷிஹாப்ஹம்ஷா (39) உட்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்கள் களமசேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சுற்றுலா பயணிகள், விடுதி ஊழியரையும், உரிமையாளரையும் அவதூறாக பேசி தாக்கியதாக விடுதி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நெடுங்கண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கும் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *