தேனி தீயணைப்புத்துறை இடத்தை மீண்டும் ஆக்கிரமிக்க முயற்சி; 2 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார்
தேனி, : தேனியில் தீயணைப்புத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தவர் மீது 2வது முறையாக தேனி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், சம்பந்தப்பட்ட நபர் கைவரிசை காட்டிய நிலையில் நேற்றும் 3வது முறையாக புகார் அளிக்கப்பட்டது.
தேனி தீயணைப்புத்துறைக்கு சொந்தமான இடம் மாவட்ட பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்திற்கு அருகே உள்ளது. இந்த இடத்தை சொந்தம் கொண்டாடிய அரண்மனைப்புதுார் ராஜேந்திரன், கடந்தாண்டு அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள முயற்சித்தார். தீயணைப்புத் துறையினர் அந்த இடத்திற்கு வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர். இரவு பகலாக கூடாரம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ராஜேந்திரன் வேலி அமைக்கப்பட்ட பகுதிக்குள் வேலை ஆட்களுடன் வந்தார். அங்கு கற்களை இறக்கினார்.
பாதுகாப்புப் பணியில் இருந்த தீயணைப்புத் துறையினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தேனி போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்ற பின், தானும் போலீசில் புகார் செய்துள்ளதாகவும், இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என கூறியவாறு ராஜேந்திரன் அங்கிருந்து சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறை சார்பில் தேனி போலீசில் 2 முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று ராஜேந்திரன் ஆக்கிரமிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு பின்பும், தேனி போலீசில் 3வது முறையாக நேற்று தீயணைப்புத்துறையினர் புகார் அளித்துள்ள, தீயணைப்புத்துறை அதிகாரிகள், எஸ்.பி., நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.