புதிய திட்ட சாலை அமைக்க பேச்சுவார்த்தை தேனி புது பஸ் ஸ்டாண்ட் ரோடு
தேனி: தேனி நகராட்சிக்கு உட்பட்ட மதுரை ரோடு புது பஸ் ஸ்டாண்ட் ரோட்டை இணைக்கும் பி5-பி5 திட்டசாலை அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி நகராட்சி உருவாக்கிய போது, நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டசாலைகள் வரையறுக்கப்பட்டன. அவற்றில் சில தற்போது பயன்பாட்டில் உள்ள பல திட்டசாலைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. அதில் கம்பம் ரோடு சுப்பன்செட்டிதெரு, அரண்மனைப்புதுார் விலக்கு திட்டசாலை, உழவர்சந்தை ரயில்வே ஸ்டேஷன் கம்பம் ரோடு திட்ட சாலைகள் முக்கியமானதாகும்.
இந்நிலையில் மதுரை ரோட்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் – கலெக்டர் அலுவலக ரோட்டில் இணைக்கும் வகையில் பி5-பி5 திட்டசாலை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘பி5-பி5 திட்டசாலை அமைப்பதற்கான பேச்சு வார்த்தை, அளவிடும் பணிகள் துவங்கி உள்ளன. இந்த திட்டசாலை மதுரை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகேதுவங்கி புதுபஸ் ஸ்டாண்ட்-கலெக்டர் அலுவலக ரோட்டில் உள்ள யானை குழாய் வரை 550 மீ., நீளம், 40 மீ அகலத்தில் அமைகிறது. மேம்பால பணி தீவிரப்படுத்தப்படும் வேளையில், இந்த திட்டசாலையை ஒரு வழிப்பாதையாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திட்டசாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்., என்றனர்.