சென்னை – போடி அதி விரைவு ரயில் வ டபழஞ்சியில் நின்று செல்ல வேண்டும்
தேனி : ‘சென்னையில் இருந்து போடி வரும் அதிவிரைவு ரயிலை வடபழஞ்சி ரயில்வே நிறுத்தத்தில் நிறுத்தி, பின் எடுத்து செல்ல வேண்டும்.’ என, தேனி மாவட்டத்திற்கு பணிக்கு வரும் அலுவலர்கள், கல்லுாரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து போடிக்கு வாரத்தில் மூன்று நாட்கள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னையில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் புறப்பட்டு மறுநாள் காலை 7:00 மணிக்கு மதுரை வருகிறது.
மதுரை போடி மின் மயமாக்கல் பணி முழுவதும் நிறைவடையாததால் 7:15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் தினமும் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படுகிறது.
இதனால், அதனை தொடர்ந்து புறப்பட வேண்டிய பயணிகள் ரயில் சென்னை போடி ரயில் இயங்கும் நாட்களில் தாமதமாக புறப்படுவது தொடர்கிறது.
இதனால் மதுரையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு பணிக்கு வருவோர், சட்டக் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் தாமதமாக வரும் நிலை ஏற்படுகிறது. இதில் பெரும்பாலானவர்கள் மதுரை புறநகர் பகுதியான வடபழஞ்சி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஏறுகின்றனர். பணி, கல்லுாரிக்கு தாமதமின்றி செல்லும் வகையில் சென்னை போடி அதிவிரைவு ரயிலை வடபழஞ்சி ரயில்வே நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.