குறுவையில் மாற்றுப் பயிர் திட்டம்; சிறுதானிய சாகுபடிக்கு நடவடிக்கை
கம்பம்; குறுவையில் மாற்றுப் பயிர் சாகுபடி திட்டத்தில் எண்ணெய் வித்து பயிர்கள், சிறுதானியங்கள் சாகுபடி செய்ய விவசாயிகளை தயார் படுத்த வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குறுவையில் நெல்லுக்கு பதில் சிறுதானிய ங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்ய வேளாண் துறை இயக்குநரகம் கடந்தாண்டு நடவடிக்கை எடுத்தது. தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்கள் சாகுபடி செய்யவும் அறிவுறுத்தியது
குறுவையில் நெல் சாகுபடியை தவிர்த்து, சிறு தானியங்கள் சாகுபடி செய்தால் ரூ.1150 க்கு, வேளாண் இடுபொருள்கள், 4 கிலோ விதை இலவசமாகவும், பயறு வகை பயிர்களுக்கு ரூ.1740 க்கு இடுபொருள்கள் மற்றும் 8 கிலோ விதை, எண்ணெய் வித்து பயிர்களுக்கு ரூ.4700 க்கு இடுபொருள்கள் மானியமாக வழங்கப்படும்.
ஆனால் விவசாயிகள் பயறு வகைகள் மட்டும் சாகுபடி செய்வதாகவும், சிறு தானியங்கள் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்ய சூழ்நிலைகள் ஏற்றதாக இல்லை என கடந்தாண்டு மறுத்து விட்டனர்.
இச் சாகுபடிக்கு விவசாயிகள் தயக்கம் காட்டுவதால் திட்டம் கைவிடப்பட்டு, பயறு வகை சாகுபடி மட்டும் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அல்லது வரும் ஆண்டிலாவது சிறு தானியங்கள், எண்ணெய் வித்து பயிர்சாகுபடி செய்ய விவசாயிகளை வலியுறுத்த வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேளாண் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.