தென்னையில் ஊடுபயிராக கோக்கோ, மிளகு வளர்ப்பு பயிற்சிக்கு கோரிக்கை
தேனி; தென்னையில் ஊடுபயிர்களாக கோக்கோ, மிளகு, ஜாதிக்காய் வளர்ப்பது பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க வேளாண், தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் 20ஆயிரம் எக்டேருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு சில விவசாயிகள் தென்னையில் ஊடுபயிராக நெல், பூக்கள் சாகுபடி செய்கின்றனர். ஆனால், பிற மாவட்டங்களில் தென்னையில் ஊடுபயிராக மிளகு, கோக்கோ, ஜாதிக்காய், பாக்கு மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
தென்னையில் கணிசமான வருவாய் என்றாலும் கோக்கோ, ஜாதிக்காய், மிளகு போன்றவற்றில் கூடுதல் வருவாய் ஈட்டலாம். மேலும் இப்பயிர்கள் வளர நிழல், அதிக வெப்பம் இல்லாத சூழல் தேவை. இந்த சூழல் மாவட்டத்தில் உள்ள தென்னை தோப்புகளில் நிலவுகிறது. இவ்வகையான நறுமணப்பொருட்கள், கோக்கோஉள்ளிட்டவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்வது பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு, பயிற்சியும் வழங்க வேளாண், தோட்டக்கலைத் துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.