போடி நகராட்சி 8 வது வார்டு சுப்புராஜ்நகர் குடியிருப்போர் அவ தி : குடியிருப்புகளுக்கு 62 ஆண்டுகளாக பட்டா வழங்காததால் பரிதவிப்பு
போடி: போடி சுப்புராஜ் நகர் குடியிருப்புகளுக்கு 62 ஆண்டுகளாக பட்டா வழங்காததால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றன
போடி நகராட்சி 8 வது வார்டு சுப்புராஜ் நகர், சூர்யா நகரில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். சுப்புராஜ் நகரில் குடியிருப்பவர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மூலம் 62 ஆண்டுகளுக்கு முன் வீட்டுமனை இடம் வாங்கப்பட்டது. இதில் வீடுகட்டி குடியிருந்தும் தற்போது வரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. புதுக்காலனி ரோட்டில் கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கிய இடத்தில் வீடுகள் கட்டியும் வீட்டு வரி நிர்ணயிக்காமல் நகராட்சி நிர்வாகம் காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது.
இதனால் குடிநீர் இணைப்பு பெற முடியவில்லை. காமராஜ் வித்யாலயா பள்ளி அருகே ரோடு வசதி இன்றி குண்டும், குழியுமாக இருப்பதால் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி சுப்புராஜ் நகர் குடியிருப்போர் நிர்வாகிகளான ஹபிபுல்லா, மாரிமுத்து, ஈஸ்வரன், லட்சுமணன், வி.லட்சுமணன் ஆகியோர் கூறியதாவது:
குடியிருப்புகளுக்கு பட்டா தேவை
சுப்புராஜ் நகரில் வீட்டுமனைஇடம் வாங்கி வீடுகள் கட்டிய நிலையில் பட்டா வழங்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் சுப்புராஜ் நகர் நலச்சங்கம் மூலம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் வங்கி கடன் பெறவும், பத்திதிரப்பதிவு செய்ய முடியாமல் சிரமம் அடைகின்றோம். 5 வது தெருவில் ரோடு, சாக்கடை வசதி இன்றியும், போர்வெல் தண்ணீர் தொட்டி சிலாப் உயரமாக உள்ளதால் ஆட்டோ கூட செல்ல சிரமம் ஏற்படுகிறது. ரயில்வே சுரங்க பாதை தடுப்பு சுவர் இருபுறமும் ரோடு, விளக்கு வசதி இன்றி சிரமம் அடைந்து வருகின்றோம். இதனால் பெண்கள் அச்சம் அடைகின்றனர். பல ஆண்டுகளுக்கு பின் பாதாள சாக்கடை அமைத்தும் சிலாப்புகள் இன்றி திறந்த வெளியில் உள்ளது. முறையாக சாக்கடை அமைக்காததால் கழிவுநீர் செல்ல வழி இன்றி தேங்கியுள்ளது.
குடிமகன்கள் தொல்லை
சுப்புராஜ் நகரில் அனைத்து வசதிகளுடன் கூடிய நகராட்சி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு குடிமகன்கள் மது பாட்டில்களை உடைத்து செல்கின்றனர். மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும், இளைஞர்கள் உடற்பயிற்சி, விளையாடவும் முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடுப்புச் சுவர் சீரமைப்பு தேவை
போடி 8, 9, 10 வது வார்டுகளுக்கு உட்பட்ட சுப்புராஜ்நகர், புதுக்காலனி, பரமசிவன் கோயில், தனியார் பள்ளி, ஆதிபராசக்தி கோயில் செல்லும் முக்கிய பாதையில் வஞ்சி ஓடை பாலம் அமைந்து உள்ளது. பாலம் கட்டி15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பாலத்தின் அடிப்பகுதி முழுவதும் அரிப்பு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் தடுப்புச்சுவர் முழுவதும் சேதம் அடைந்து உள்ளது. பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்காததால் கனரக
சேதம் அடைந்து உள்ளது. பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்காததால் கனரக வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. வஞ்சி ஓடை பாலத்தை சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பையால் சுகாதாரக்கேடு
பழைய கோர்ட் கட்டடத்தில் தெருக்களில் தேக்கமாகும் குப்பைகளை மொத்தமாக கொட்டி ஸ்டாக் பாய்ண்ட் அமைத்து வருகின்றனர். இது போல் சூர்யா நகரில் குப்பைகள், சாக்கடை கழிவுநீர் தேக்கமாக உள்ளது. இதனால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுகிறது. தெருக்களில் சாக்கடை கழிவுநீர், குப்பைகள் தேங்காத வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.