அறுவடைக்கு முன் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்க எதிர்பார்ப்பு; இரண்டு ஆண்டுகளாக கொள்முதல் செய்வதில் சுணக்கம்
கூடலுார்: கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் அறுவடைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முன்கூட்டியே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக தாமதமாக துவக்கியதால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது.
கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடி நடந்து வருகிறது. பிப்ரவரி இறுதி வாரம் மற்றும் மார்ச் மாதத்தில் அறுவடை மும்முரமாகும். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதாலும், உடனடியாக பணம் பட்டுவாடா ஆவதால் விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஆகிய 8 வட்டாரங்களில் 12 கொள்முதல் நிலையம் அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கூடலுாரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் நிரந்தரமாக கொள்முதல் நிலையம் அமைக்காமல் அவ்வப்போது இடத்தை தேர்வு செய்து கொள்முதல் செய்து வருகின்றனர்.
2023ல் இரண்டாம் போக நெல் சாகுபடியின் போது, அறுவடை பணிகள் முடியும் தருவாயில் நெல் கொள்முதல் நிலையத்தை பெயரளவில் துவக்கினர். 2024ல் முதல் போக நெல் சாகுபடிக்கான அறுவடை துவங்கி பல நாட்களுக்குப் பின் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது. இதனால் அனைத்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் அரசு சுணக்கம் காட்டியது. இந்த ஆண்டு முன்கூட்டியே கொள்முதல் நிலையத்தை துவக்குவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஜெயபால், பொருளாளர், முல்லைச் சாரல் விவசாய சங்கம், கூடலுார்:
முல்லைப் பெரியாற்றின் தலைமதகுப் பகுதியில் இருக்கும் கூடலுாரில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. விவசாயிகள் அறுவடை செய்து கொண்டுவரப்படும் நெல் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு பாதுகாப்பாக வைப்பதற்கு அரசுக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும். மேலும் அறுவடை பணிகள் துவங்குவதற்கு முன்பே கொள்முதல் நிலையத்தையும் துவக்கி விட வேண்டும்.