தோள் பட்டை மூட்டு மாற்று ஆப்பரேஷன் செய்து தேனி மருத்துவக் கல்லுாரி சாதனை
ஆண்டிபட்டி; தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதன்முறையாக கட்டுமான தொழிலாளிக்கு தோள்பட்டை மூட்டு மாற்று ஆப்பரேஷன் செய்து டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவரக்கோட்டையைச் சேர்ந்தவர் கரந்தமலை 40, கட்டுமான தொழிலாளி. ஆறு மாதத்திற்கு முன் வேலை செய்த இடத்தில் தவறி விழுந்து தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதித்ததில் தோள்பட்டை எலும்பில் தலைப்பகுதி பாதித்தது தெரிந்தது. முறையான சிகிச்சை எடுக்காததால் அப்பகுதி ‘சீழ்’ பிடித்திருந்தது. அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்றதால் வீட்டுக்கு திரும்பினார். சிவரக்கோட்டையில் நடந்த அரசு மருத்துவ முகாமிற்கு கரந்தமலை சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தேனி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். இதன்படி டிச., 11ல் தேனி மருத்துவக்கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை எலும்பு முறிவு பிரிவு துறை தலைவர் டாக்டர் பிரேம் குமார் பரிசோதித்து முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் டிச.24ல் தோள்பட்டை மூட்டு மாற்று ஆப்பரேஷன் நடந்தது. சிகிச்சை முடிந்த சில நாட்களில் கரந்தமலை குணமடைந்தார். தேனி கோடங்கிபட்டியை சேர்ந்த ஜெயலட்சுமி 45,க்கும் செயற்கை மூட்டு பொருத்தி தேனி மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆப்பரேஷன் செய்த டாக்டர்கள் குழுவினரை கல்லூரி முதல்வர் முத்துசித்ரா பாராட்டினார்.