மாவட்டத்தில் 52 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு 180 பேர் பங்கேற்பு
தேனி: மாவட்டத்தில் 52 இடங்களில் வனத்துறை, ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
இதில் துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் உட்பட 180 பேர் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடந்தது. இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அவர்களுக்கு வனத்துறை சார்பில் பறவைகள் இனங்கள் கண்டறிதல் உள்ளிட்டவை பற்றி விவரித்தனர்.
இந்த கணக்கெடுப்புப் பணிகள் குளங்கள், கண்மாய்கள் என வனத்துறை மூலம் 25, புலிகள் காப்பகம் சார்பில் 27 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. பணி மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட 180 பேர் பங்கேற்றனர்.
இந்த கணக்கெடுப்பில் செங்குருகு, மஞ்சள் குருகு, கொண்டை நீர்காகம், கரிய அரிவாள் மூக்கன், மஞ்சள்மூக்கு ஆள்காட்டி, செந்நாரை, கம்புள்கோழி, புள்ளி மூக்கு வாத்து உள்ளிட்ட 28 வகைக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கணக்கிடப்பட்டன.