ஒரு கிலோ ஏலக்காய் ரூ.3100க்கு வளைகுடா நாடுகளின் ஏற்றுமதி ஆர்டர்களால் விற்பனை
கம்பம்:2019 ஆக.,3ல் சராசரி ஏலக்காய் விலை கிலோ ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்த விற்பனை அளவு இதுவரை முறியடிக்கப்படாத நிலையில், தற்போது ஏலக்காய் கிலோ ரூ.3,100க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் விலை அதிகரிக்கும் என ஏல விவசாயிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. குவாதிமாலா நாட்டில் மானாவாரி நிலங்களில் விளைவதால் அந்நாட்டு ஏலக்காய், விலை குறைவாக கிடைக்கிறது. இடுக்கியில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் 40 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்டது.
குவாதிமாலா நாட்டிலும் ஏலக்காய் மகசூல் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச மார்க்கெட்டில் இந்திய ஏலக்காய்க்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதை நிரூபிக்கும் வகையில் ரம்ஜான் பண்டிகை ஆர்டர்கள் தற்போது வளைகுடா நாடுகளில் இருந்து வரத்துவங்கின. கடந்த 3 மாதங்களில் சராசரி விலை கிலோவிற்கு ரூ.2700 முதல் ரூ.2900 வரை இருந்தது.
சில நாட்களாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3100 விற்பனையாகிறது.
ஏல விவசாயிகள் கூறியதாவது: இந்தியாவிலும், குவாதிமாலாவிலும் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
2025 மார்ச்சில் சராசரி விலை கிலோவிற்கு ரூ.3500 கிடைக்கும் என மதிப்பிடப்பட்ட நிலையில் தற்போது கிலோவிற்கு ரூ.3 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்றனர்.
வளைகுடா நாடுகளின் ஆர்டர்கள் கிடைத்த போதும் அவர்கள் கேட்கும் 8 எம்.எம். போல்ட் ரக காய்கள் வரத்து குறைவாக இருப்பதால், ஏற்றுமதியாளர்களும் திணறி வருகின்றனர்.
ஏலக்காய் வர்த்தக வரலாற்றில் 2019 ஆக.,3 சராசரி விலை கிலோ ரூ.7 ஆயிரத்திற்கு விற்ற சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. இந்த சீசனில் அது நடக்குமா என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் உள்ளது.