Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

கடமலைக்குண்டு அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்: விவசாயிகள் கவலை

வருசநாடு, ஜன.7: கடமலைக்குண்டு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு அருகே கொம்புக்காரன்புலியூர் கிராமத்தை ஒட்டியுள்ள பாம்புச்சேரி மலையடிவாரத்தில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மலைப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக, தோட்ட பகுதிக்குள் புகுந்தன.

அப்போது கொம்புக்காரன்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரின் தோட்டத்திற்குள் சென்று அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தி விட்டு சென்றன. இதனைத்தொடர்ந்து நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற அவர், தென்னை மரங்கள் சேதமடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தோட்டத்தில் ஆங்காங்கே யானைகளின் சாணம் கிடந்துள்ளது. இதனால் தென்னை மரங்களை யானை கூட்டம் சேதப்படுத்தி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து அவர், கண்டமனூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்ததும் வனத்துறையினர் தோட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சேதப்படுத்தப்பட்ட தென்னை மரங்களுக்கு உரிய நிவாரணம் பெற்று வருவதாக தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் யானைகளை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *