18ம் கால்வாய் சீரமைக்காததால் தண்ணீர் செல்வதில் சிக்கல்
கூடலுார்: 18ம் கால்வாய் கரையில் ஏற்பட்ட நீர்க்கசிவை சீரமைக்காததால் கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாற்றின் தலை மதகுப்பகுதியான லோயர்கேம்பில் இருந்து கூடலுார், கம்பம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 18ம் கால்வாயில் கடந்த டிச. 21ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
16 நாட்களாகியும் போடி கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள், தண்ணீர் செல்வதற்கு தடையாக வளர்ந்துள்ள செடி கொடிகள், பல இடங்களில் நீர்க்கசிவுகள் உள்ளிட்ட காரணங்களால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கூடலுார் அருகே தம்மனம்பட்டி ரோடு சந்திக்கும் இடத்தில் கால்வாய் கரைப்பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டு கூடுதலான தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் திறக்கப்படும் தண்ணீர் முழுவதும் கால்வாயில் செல்ல முடிவதில்லை. இதுவரை சீரமைக்காததால் கரையை ஒட்டிள்ள 51 கண்மாய்களும் நிரம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்கூட்டியே கால்வாயை சீரமைத்து தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.