கம்பம் அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
கம்பம், ஜன.7: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இதில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான் சிட்டு உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் பங்கேற்று கலந்து கொண்டன.
தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஜோடி மாடுகள் பந்தயத்தில் பங்கேற்றன. பந்தயத்தின் இறுதி சுற்றான கரிச்சான் மாட்டு பந்தயத்தில் இரண்டு மாட்டு வண்டிகள் ஒன்றுக்கொன்று உரசிக்கொண்டு சென்றதில் தேவாரம் பகுதியைச் சார்ந்த ராஜா என்பவர் கீழே விழுந்து காயமடைந்தார். அவர், கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது உறவினர் விழா கமிட்டியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.