Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்படும் ஜெர்சி, கருப்பு வெள்ளை மாடுகள் தேனி கால்நடை மருத்துவக் கல்லுாரி முதல்வர் தகவல்

மாவட்டத்தில் வளர்ப்பின மாடுகளான ஜெர்சி, ஹோல்சியன் பிரிசியன் (கருப்பு வெள்ளை மாடுகள்) மாட்டினங்களில் மலேரியா ஒட்டுண்ணியால் உண்ணிக்காய்ச்சல் ஏற்படுகிறது.

‘பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறுவது அவசியம் என,தேனி கால்நடை மருத்துவக் கல்லுாரி ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் டாக்டர் பொன்னுத்துரை தெரிவித்தார்.

தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி பகுதிக்காக அவர் கூறியதாவது:

புற ஒட்டுண்ணிகள் என்றால் என்ன

கால்நடைகளை வெளியில் தாக்கும் பூச்சிகளை புற ஓட்டுண்ணிகளாகும். உட்புறம் தாக்கும் ஒட்டுண்ணிகள் அக ஒட்டுண்ணிகள் என உள்ளன. உண்ணி, பேன் தெல்லுப்பூச்சி,சிற்றுண்ணிகள் பொதுவாக காணப்படும் புற ஒட்டுண்ணிகளாகும். புற ஒட்டுண்ணிகள் கால்நடைகளின் மாடுகளின் காது, வால், கால்களுக்கு இடையே காணப்படும்.இவ்வகை உண்ணிகள் ரத்தத்தை உறிஞ்சி வாழ்வதோடு, நோய் கிருமிகளையும் பரப்பும். இதனால் ரத்த சோகை, தோல் பாதிப்பு மாடுகள், காளைகளுக்கு ஏற்படும். மலைமாட்டு இனங்களுக்கு இவ்வகை பாதிப்பு ஏற்படாது. அந்த மாடுகள் இயற்கையிலேயேஉடலமைப்பு மாறுபட்டு இருப்பதாலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் இப்பாதிப்பு தேனி மாவட்டத்தில் உள்ள மலைமாடுகளுக்கு பெரிதளவில் ஏற்படாது.

அக ஒட்டுண்ணிகள் அதன் பாதிப்புகள் குறித்து

குடற்புழுக்கள், ரத்த ஓட்டுண்ணிகள், தட்டைப்புழு, நாடாப்புழு, உருண்டைப்புழு நோய்கள் தாக்கம் ஏற்படும்.அஜீரண கோளாறு, எடைக்குறைவு, வயிறு பெருத்தல், உடல் எடை குறைதல், தாடை வீக்கம், கழிச்சல், கண்கள் வெளிரும், இவை தீவிரமானால் இறப்பு ஏற்படும். இவற்றை தடுக்க பாதிப்பின் தன்மையை கண்டறிந்து, கால்நடை டாக்டர்கள்ஆலோசனையின் படி சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

சிதோஷ்ண நிலை மாற்றத்தால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா

மாறுபட்ட பருவ காலம் தற்போது நடக்கிறது. கால்நடைகளுக்கு சீதோஷ்ண நிலை கட்டாயமாக பாதிப்புதான்ஏனெனில் புற ஒட்டுண்ணிகளாக உள்ள பூச்சி, கொசு, உண்ணிகள் அதிகவெப்ப காலங்களில் வாழதகுதியற்றவை. சாதாரணமாக கொசுவின்வாழ்நாட்கள் 7 நாட்கள் தான். ஆனால் அது மூன்று படிநிலைகளில் 1400க்கும் மேற்பட்ட சந்ததிகளைஉருவாக்கிவிடும். அதே மாதிரிதான் பிற அக ஒட்டுண்ணிகளும் வாழ்நாட்களில் சந்ததிகளைபெருக்கி விடும். அதனால் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இப்பாதிப்பு கால்நடைகளுக்கு அதிகளவு ஏற்படும். உண்ணிக்காய்ச்சல் குறித்து விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

உண்ணிக்காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது

‘பெபிசியா பைஜனிணா’என்ற மலேரியா ஒட்டுண்ணிகள் மாடுகளில் ரத்தத்தை உறிஞ்சிவிட்டு கீழே விழுந்து தனக்குள் இனப்பெருக்கத்தின் மூலம் உண்ணிக்காய்ச்சலை பெருக்கும் உண்ணிகளாக வளர்கின்றன. இந்த வளர்ந்தஒட்டுண்ணிகள் தாக்கும் போது உண்ணிக்காய்ச்சல் பாதிப்பு வளர்ப்பு இன மாடுகளுக்கு ஏற்படும். இவை மாடுகளின்ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை ஹீமோகுளோபின் அணுக்களை சிதைத்துவிடும். இதனால் மாடுகள் அடர் காபி கலரில் கோமியத்தை வெளியேற்றும்.

இவ்வகை பாதிப்பால் மாடுகளின் தினசரி அனிச்சைசெயல்கள் பாதிக்கும். உடனடியாக இதற்கு சிகிச்சை அவசியம். விவசாயிகள் எச்சரிக்கையாக நோய்முற்றிவிடாமல் பார்த்து கொண்டால், பொருளாதார இழப்பை தவிர்க்கலாம். வீடுகளிலும்கோமாதா என்ற செல்வத்தை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது.

உண்ணிக்காய்ச்சல் பாதிப்பை எப்படி கண்டறிவது

உண்ணிக்காய்ச்சல் பாதித்திருந்தால் காய்ச்சல் அடிக்கும். காதை உள்ளங்கையில் பிடித்து பார்த்தால் அதீதவெப்பமாக இருக்கும். இதனை வைத்து கண்டு கொள்ளலாம். அடர் காபி’கலரில் சிறுநீர் (கோமியம்) வெளியாகும். கண்களில் வெளிர் மஞ்சள் நிறமாக தோன்றும். மாடுகளால் நிலையாகதனது அனிச்சை செயல்களை செய்ய இயலாது. இது பொருளாதார ரீதியாக கால்நடைவளர்ப்போர், விவசாயிகளை பாதிக்கும்.

இதற்கு என்ன தீர்வு

இதற்கு அனைத்து கால்நடை மருத்துவமனைகள் அல்லது தேனி தப்புகுண்டுவில் உள்ள கால்நடை மருத்துவ கல்லுாரியின் சிகிச்சைமையத்தில் சிகிச்சை பெறலாம். இங்கு டைமினாசின் அசுட்டரேட் என்கிற மருந்துவழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இதற்கான ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படும். குறுகிய நாட்களில் மாடுகளை குணப்படுத்த முடியும். கால்நடைமருத்துவமனைகளிலும் இந்த மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *