அறிமுகமான புதிய ரக ஏல நாற்றுக்கள் வாங்குவதில் விவசாயிகள் குழப்பம்
கம்பம்: இந்திய வாசனை திரவியப் பொருள்கள் ஆராய்ச்சி நிலையம் அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய ஏல நாற்றுக்களை எங்கு சென்று வங்குவது என தெரியாமல் ஏல விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
இந்தியாவில் ஏலக்காய் சாகுபடி கேரளா, கர்நாடகா, தமிழகத்தில் சாகுபடியாகிறது. இதில் கேரளா 80 சதவீத உற்பத்தியை பகிர்ந்து கொள்கிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக வழுக்கை அல்லது மைசூர் என்ற ரகம் இருந்தது. 30 ஆண்டுகளுக்கு முன் விவசாயி ஒருவர் நல்லாணி என்ற ரகத்தை அறிமுகம் செய்தார். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் நறுமண பொருள் ஆராய்ச்சி மையம் காவேரி மற்றும் மனுஸ்ரீ என்ற இரு புதிய ஏல ரகங்களை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. பிரதமர் வெளியிட்ட 109 புதிய வேளாண் , தோட்டக்கலை, நறுமணப் பொருள் ரகங்களில், இந்த இரு ஏலக்காய் ரகங்களும் இடம் பெற்றிருந்தது. இதில் காவேரி என்ற ரகம் கர்நாடகாவிற்கு நன்றாக இருக்கும் என்றும் மனு ஸ்ரீ ரகம் கேரளாவிற்கு சிறந்ததாக இருக்கும் என்றும் ஆராயச்சி நிலையம் அறிவித்தது. ஈரத்தன்மையை தாங்கி வளரக் கூடியது என்றும், ஏக்கருக்கு சராசரி 550 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்
ஏல விவசாயிகளுக்கு புதிய ரகங்களின் முழு தகவல்களை ஸ்பைசஸ் வாரியம் அளிக்க வேண்டும், நாற்றுகளை எங்கு வாங்கலாம் என கூற விவசாயிகள் கோரியுள்ளனர். ஸ்பைசஸ் வாரியத்தினர் கூறுகையில், இடுக்கி மாவட்டம் பாம்பாடும் பாறை ஏலக்காய் ஆராய்ச்சி நிலையத்தில் புதிய நாற்றுக்களை வாங்கலாம். அல்லது விவசாயிகள் வாங்கி சாகுபடி செய்திருந்தால், அவர்களிடம் நாற்றுக்களை வாங்கி கொள்ளலாம் என்கின்றனர்.