மக்களுடன் முதல்வர் முகாமில் டாக்டர் வராததால் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது.
தங்க தமிழ்ச்செல்வன் எம். பி., எம்.எல்.ஏ.,க்கள் சரவணக்குமார், மகாராஜன் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் அபிதாஹனிப் வரவேற்றார்.
அமைச்சர் பெரியசாமி திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், ‘மக்களுடன் முதல்வர் திட்டம் ஊராட்சி பகுதிகளிலும் துவங்கப்பட்டுள்ளது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 17 துறைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்களிடம் பெற ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் குறைகளை மனுக்களாக வழங்கி நிர்வர்த்தி பெறலாம்’ என்றார். லட்சுமி புரம், சருத்துப்பட்டி, ஜல்லிபட்டி, வடபுதுப்பட்டி ஊராட்சி மக்கள் மனுக்களை கொடுத்தனர்.
புகார்
மாற்றுத்திறனாளிகள் வெங்கடபூபதி, மதன்குமார், போஜர், கவுரிசங்கர், முருகேஸ்வரி, சந்திரா, ஐயப்பன் உள்பட பலர் அடையாள அட்டை பெறுதல், மறுபதிவு, ரயில், பஸ் பாஸ், காதொலி கருவி பெறுதல் போன்ற சலுகை பெற காலை 10:00 மணிக்கு மனுவுடன் வந்தனர்.
இவர்களை பரிசோதனை செய்யும் எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர், நரம்பியல் டாக்டர் மதியம் 1:00 மணி வரவில்லை. மதியம் 1:10 க்கு எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர் சங்கர்நாத் வந்தார். அவர் பரிசோதித்து நரம்பியல் டாக்டரிடம் காண்பிக்க கூறினார்.
ஆனால் நரம்பியல் டாக்டர் முகாம் முடியும் வரை வரவில்லை. மாற்றுத்திறனாளிகள் வெங்கடபதி, மதன்குமார் கூறுகையில்: இம் முகாமில் எங்களை போன்றவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். முகாமில் ஐந்து மணி நேரம் காத்திருந்தும் ஒரு பலனும் கிடைக்கவில்லை என்றார்.