பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.14 லட்சம் ஊக்கத் தொகை
தேனி: தேனி ஆவினுக்கு உட்பட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இதனை விரைவில் வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி ஆவினுக்கு உட்பட்டு தற்போது 400 பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.
இச்சங்கங்கள் மூலம் தினமும் 60ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் ஒன்றியங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்கள் 2023 செப்., அக்டோபரில் வழங்கிய பால் அடிப்படையில் லிட்டருக்கு ரூ. 50 பைசா வீதம் பொங்கல் போனஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் கடந்த செப்.,ல் விவசாயிகள் வழங்கிய பாலின் அளவு கணக்கிடப்பட்டுள்ளது. லிட்டருக்கு ரூ.50 பைசா வீதம் வழங்க ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன் இத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும் சிறப்பாக செயல்பட்ட சங்கங்களுக்கு விருதுகள் வழங்க ஏற்பாடு நடந்து வருவதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.