குப்பைக் கிடங்கில் பற்றிய தீ புகையால் மக்கள் பாதிப்பு
கூடலுார் : கூடலுார் குப்பைக் கிடங்கில் தீப்பிடித்ததில் புகை வெளியேறி குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்ததால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
கூடலுார் நகராட்சியில் சேகரமாகும் குப்பை, குடியிருப்புகளை ஒட்டியுள்ள பெத்துக்குளம் பகுதியில் கொட்டப்படுகிறது. அடிக்கடி தீ வைத்து விடுவதும், புகை வெளியேறி குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்து பொது மக்கள் பாதிப்பிற்கு உள்ளாவதும் தொடர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் சமீபத்தில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சுற்றுச்சுவர் கட்டி, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீப்பிடிக்காமல் நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இருந்த போதிலும் நேற்று மாலை குப்பைக் கிடங்கில் மீண்டும் தீப்பிடித்து மளமளவென பரவியது. குடியிருப்புப் பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. பலர் சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டனர். தெருக்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் புகை சூழ்ந்ததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அவசியம் கருதி உடனடியாக சுற்றுச்சுவர் கட்டவும், கண்காணிப்பு கேமரா பொருத்தவும் நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.