ரயில்வே சுரங்கபாதையில் தேங்கும் கசிவு நீரால் வாகனங்கள் பாதிப்பு
ஆண்டிபட்டி,: ஆண்டிபட்டி – மேக்கிழார்பட்டி ரோட்டில் ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கும் கசிவு நீரால் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றன
மதுரை – போடி அகல ரயில் பாதையில் ஆண்டிபட்டி பகுதியில் மேக்கிழார்பட்டி ரோடு, ஏத்தக்கோயில் ரோடு, தெப்பம்பட்டி ரோடு, கரிசல்பட்டி ரோடு உட்பட 6 இடங்களில் சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் சுரங்க பாலத்தில் அதிகப்படியான நீர் தேங்கும் போது வாகனங்கள் செல்ல முடியாமல் நின்று விடுகின்றன. மோட்டார் மூலம் மழை நீரை கடத்திய பின்னரே போக்குவரத்தை தொடர முடிகிறது. இந்நிலையில் மழை பெய்து 10 நாட்களுக்கு மேலாகியும் மேக்கிழார்பட்டி ரோட்டில் உள்ள சுரங்க பாலத்தில் நீர் கசிந்து அதிக அளவில் தேங்கியுள்ளது. தேங்கும் நீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்தினாலும் சில மணி நேரங்களில் மீண்டும் சேர்ந்து விடுகிறது. தொடர்ந்து தேங்கும் நீரால் மேக்கிழார்பட்டி ரோட்டில் வாகனங்கள் சென்றுவர திணறுகிறது. பொதுமக்களும் நடந்து சென்று பாலத்தை கடக்க முடியாமல் தினமும் தவிக்கின்றனர். சுரங்க பாலத்தில் கசிவு நீர் சுரப்பை தடுக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.