போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளை திருடன் கையில் துப்பாக்கி பலே! தமிழகத்தின் நிலையை பாருங்கள்!
தேனி:தேனி மாவட்டம், பெரியகுளம் ரோடு, ஈஸ்வர் நகரில், குடியிருப்புக்கு மத்தியில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஸ்டேஷன் உள்ளது.
இங்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தின் மாடியில் உள்ள கதவை, நேற்று அதிகாலை 1:00 மணியளவில் உடைத்து, இருவர் ஸ்டேஷனுக்குள் புகுந்தனர். கதவு உடைத்த சத்தம் கேட்டு அருகில் வசிப்போர் அவசர போலீஸ் எண், 100க்கு தகவல் தெரிவித்தனர்.
ஸ்டேஷனுக்குள் புகுந்த இருவரும் அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்தனர். அப்போது போலீசார் அங்கு விரைந்து செல்ல, அவர்கள் வரும் சத்தம் கேட்டு ஸ்டேஷன் மாடியில் இருந்து குதித்து இருவரும் தப்பி ஓடினர்.
உடனே, போலீஸ்காரர் முருகேசன், 35, தப்பிய ஒருவரை பிடித்தார். அவர் அருகில் கிடந்த கல்லால் முருகேசனை தாக்கி தப்ப முயன்றார்.
அப்போது அங்கு வந்த சிறப்பு எஸ்.ஐ., ரமேஷ், 50, அவரை பிடித்தார். விசாரணையில், அவர் நித்திஷ்குமார், 23, என, தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின்படி, தப்பிய மற்றொருவர் உதயகுமார், 24, என, தெரிந்தது, அவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து, கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு வீடியோ கேமராக்கள், இரு பைனாக்குலர்கள், ஏர்கன் எனப்படும் ஒரு துப்பாக்கி, 200 கிராம் கஞ்சா, கைவிலங்கு, கஞ்சா ஆயில் 650 மி.லி., ஒரு பொட்டலத்தில் இருந்த மெத் ஆம்பெட்டமைன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டி.எஸ்.பி., நல்லு இருவரிடமும் விசாரித்து வருகிறார்.
இதில், நித்திஷ்குமார் மீது, 2023ல் போதை நுண்ணறிவு பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், வழக்கு தொடர்பான ஆவணங்களை அழிக்க முயன்றாரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈஸ்வர் நகரில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை கட்டடத்தில் நுண்ணறிவுப் பிரிவு
போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. இங்கு சிசிடிவி கேமராக்கள் இல்லை. இரவில் போலீஸ்காரர்கள் தங்குவதும் இல்லை.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘அனைவரும், ஒரு குற்றவாளியை பிடிக்க கம்பத்திற்கு சென்றிருந்தோம்’ என்றனர்.