காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் மார்ச் 12 மாசி தேரோட்டம்
உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசி மகத் தேரோட்டம் மார்ச் 12 ல் நடக்க உள்ளதை முன்னிட்டு, நேற்று தேர் வெள்ளோட்டம் நடந்தது.
இக்கோயில் வரலாற்று சிறப்பு பெற்றது. ராகு கேது கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். ராகுவும், கேதுவும் தனித் தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளி உள்ளனர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோயிலின் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசியில் மாசி மக தேரோட்டமாக நடைபெறும். கடந்த 2020க்கு பின் பல்வேறு காரணங்களால், தேரோட்டம் நடக்க வில்லை.
இந்தாண்டு வரும் மார்ச் 12ல் தேரோட்டம் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. மார்ச் முதல் தேதி கொடி ஏற்றத்துடன், நிகழ்ச்சிகள் துவங்க உள்ளன. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் மண்டகப்படி நடைபெறும். விதவிதமான அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடக்க உள்ளது. இதற்கான வெள்ளோட்டம் நேற்று காலை நடந்தது.
திரளான பக்தர்கள் திரண்டு நின்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். சுமார் 25 அடி துாரம் தேர் இழுக்கப்பட்டு, பின் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சுந்தரி, டி.எஸ்.பி., செங்கோட்டு வேலவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.