Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரத்தில் 12 நாட்களாக தொடரும் வேலை நிறுத்தம் : நெசவாளர்கள் ஸ்ட்ரைக்கால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி நடைபெறும் வேலை நிறுத்தத்தால் 5000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்களுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும், உரிமையாளர்களுக்கும் பல கோடி ரூபாய் மதிப்பில் துணிகள் உற்பத்தி பாதித்துள்ளது.

சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 3500க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் டிசம்பரில் முடிந்தது. புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்திற்கு தொழிலாளர்கள் வலியுறுத்தினர். உற்பத்தியாளர்கள் ஏற்க மறுத்ததால் ஜனவரி 1 ல் துவக்கிய வேலை நிறுத்த போராட்டம் 12வது நாளாக நீடிக்கிறது. விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இணக்கமான சூழல் இல்லை. வேலை நிறுத்தம் இன்றி பிரச்னையை முடிக்க அரசின் தொழிலாளர் நலத்துறை,துணி நூல் துறை, தொழிற்சங்கங்களால் முடியவில்லை.

போராட்டம் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறியதாவது

போராடுபவர்களுக்கு வருவாய் இழப்பு

சென்றாயப்பெருமாள், ஏ.ஐ.டி.யு.சி.,மாவட்ட நெசவாளர் சங்க பொதுச் செயலாளர்: சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் இரு ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும் வேலை நிறுத்த போராட்டம் 2 முதல் 6 வாரங்கள் வரை கடந்த காலங்களில் நீடித்துள்ளது. தொழிலாளர்களின் போராட்டத்தால் கடந்து காலங்களில் அதிகபட்சமாக 27 சதவீதம் வரை கூலி உயர்வு பெறப்பட்டுள்ளது.

கடந்த முறை விசைத்தறி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 10 சதவீதமும், கூடங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு 14 சதவீத கூலி உயர்வு வழங்கப்பட்டது. தொழில் கூடத்தில் 20 பேர் இருந்தாலே கம்பெனி சட்டப்படி தொழிலாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., நடைமுறைப்படுத்த வேண்டும். பல தொழில் கூடங்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். அவர்களுக்கான பலன் கிடைக்கவில்லை. கூலி உயர்வுக்கு போராடி வருவாய் இழப்பை சந்திக்கின்றனர்.

வரியை சமாளிக்கும் போது கூலி உயர்வுக்கு மறுப்பது ஏன்

ராமர், சி.ஐ.டி.யு.,விசைத்தறி சங்க மாவட்ட செயலாளர்: விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு 15 நாட்களுக்கு முன்பே உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை அவர்கள் உதாசீனம் செய்கின்றனர். தொழில், வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படுவது இயல்பு. தொடர்ந்து உயரும் நூல் விலை, தளவாட பொருட்கள், அரசுக்கான வரி இவற்றை சமாளித்து தாக்குப்பிடிக்கும் உரிமையாளர்கள் தொழிலாளர் கூலி உயர்வுக்கு மட்டும் சம்மதிக்க மறுக்கின்றனர். உற்பத்தியாளர்கள் தொழிலாளர்களை அரவணைத்து செல்ல வேண்டும்.

தொழிலாளர்கள் தினமும் தங்கள் திறமைக்கு தக்கபடி ரூ.500 முதல் 1000 வரை சம்பாதிக்கின்றனர். வேலை நிறுத்தத்தால் பல நாட்கள் வருவாய் இழந்து பெறப்படும் கூலி உயர்வால் எந்த பிரயோஜனமும் இல்லை.

ஜவுளியில் லாபம் குறைவு உற்பத்தி கூலி அதிகம்

விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தில் தற்போது ஒருங்கிணைப்பு இல்லை. போராட்ட பேச்சுவார்த்தை பற்றி பெரும்பாலான உரிமையாளர்களுக்கு முறையான தகவல் கிடைக்கவில்லை. உற்பத்தியாளர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் வரச் செய்து பிரச்னை குறித்து முடிவெடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். தற்போது சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களில் லாபம் குறைவாக உள்ளது. சேலைகள் உற்பத்திக்கான கூலி இங்கே அதிகம் உள்ளது. சங்கரன்கோவில், ராஜபாளையம், அருப்புக்கோட்டை பகுதியில் இதே ரகங்கள் தான் உற்பத்தி ஆகிறது.

கூலி வித்தியாசத்தால் அடக்க விலையில் மாற்றம் ஏற்படுகிறது.

விசைத்தறி தொழிலில் காலத்திற்கு ஏற்ப ரகங்களை மாற்றினால் மட்டுமே தொழிலில் சாதிக்க முடியும். ரக மாற்றங்களுக்கு செலவு அதிகம் ஆவதால்விசைத்தறி உரிமையாளர்கள் அதனை தவிர்க்கின்றனர். தொழில் போட்டியில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர் தொழிற்கூடங்களை மூடிவிட்டனர். பல கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் தொழிலை வேறு வழியின்றி நஷ்டம் ஏற்படாமல் தொடர வேண்டி உள்ளது.

சுமூக தீர்வுக்கு வழிகாண வேண்டும்

தீர்வு: விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரு முறை குறிப்பிட்ட சதவீத கூலி உயர்வு கிடைக்க செய்வதற்கான ஏற்பாடுகளை தொழிலாளர் நலத்துறை மேற்கொள்ள வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கிடைப்பது போல் விசைத்தறி தொழிலாளர்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை கூலி

உயர்வு கிடைக்க செய்யலாம். கொஞ்சம் கொஞ்சமாக உயரும் கூலி உயர்வால் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் விலையிலும் திடீர் உயர்வை தவிர்த்து போட்டியை சமாளிக்க முடியும்.

வேலை நிறுத்தத்தை தவிர்த்து தொழிற்சங்க பிரதிநிதிகள், ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *