அடையாள அட்டை பெற விவசாயிகள் ஆர்வம் இல்லை கூவி கூவி அழைக்கும் வேளாண் துறை
கூடலுார்: மத்திய அரசின் அடையாள அட்டை பெற பதிவு செய்யும் முகாமில் விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளதால், வேளாண் துறையினர், அலைபேசி மூலம் விவசாயிகளை அழைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு மூலம் விவசாயிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து பகுதிகளிலும் முகாம் அமைத்து விவசாயிகளின் ஆதார், நிலப் பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அலைபேசி எண் ஆகியவற்றை வைத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பதிவு செய்யும் பணியில் வேளாண் துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் கூடுதல் விளை நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் இந்த அடையாள அட்டை பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. சிறு விவசாயிகளை மட்டும் அலைபேசி மூலம் வேளாண் துறையினர் அழைத்து பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தாங்கள் வைத்திருக்கும் கூடுதலான விளை நிலங்களை பதிவு செய்யும் போது சொத்து விவரங்கள் அதிகமாக காட்டப்பட்டு விடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர்.
அதே வேளையில் ஒரு நாளைக்கு குறைந்தது 100 விவசாயிகளையாவது பதிவு செய்து அடையாள அட்டை வழங்க வேண்டும் என நிர்பந்தம் உள்ளதால் வேளாண் துறையினர் வீடு, வீடாக சென்றும், மொபைல் மூலம் அழைப்பு விடுத்தும் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.