பென்னிகுவிக் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மணிமண்டபத்தில் அரசு விழா
கூடலுார்: லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் பென்னிகுவிக்கின் 184 வது பிறந்த நாள் விழா அரசு சார்பில் விமர்சையாக கொண்டாடியதால் விவசாயிகள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் 1841 ஜன., 15 ல் பிறந்தார். தமிழக விவசாயிகளின் கடவுளாக போற்றப்படும் இவரின் பிறந்த நாள் விழா பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2019-ல் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் தொடர்ந்து அரசு, விவசாயிகள் சார்பில் பொங்கல் வைத்து விழா கொண்டாடப்படுகிறது.
களை கட்டிய மணிமண்டபம்
அரசு சார்பில் கலைநிகழ்ச்சி நடந்தது. காலையிலிருந்து மணிமண்டபத்தில் விவசாயிகள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். கூடலுார் நகராட்சி சார்பில் 55 பொங்கல் வைக்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சி, அடிப்படை வசதிகள் என அனைத்தும் நகராட்சி சார்பில் செய்யப்பட்டது.
-அரசு சார்பில் தேனி கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில், அமைச்சர் பெரியசாமி பென்னிகுவிக் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், முன்னாள் எம்.பி., செல்வேந்திரன், கூடலுார் நகராட்சி தலைவர் பத்மாவதி அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
-முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
-அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ராமர், ஜக்கையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் பல்வேறு அரசியல் கட்சியினர் பொது நல அமைப்புகள் பொதுமக்கள் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.