கம்பம் , உத்தமபாளையம் சின்னமனுாரில் மின்தடையால் அவதி: துணை மின் நிலையங்களில் முறையான பாராமரிப்பு அவசியம்
கம்பம்: – கம்பம், உத்தமபாளையம், சின்னமனுாரில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். துணை மின் நிலையங்களை பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் வண்ணத்தி பாறை, உத்தமபாளையம், ராசிங்காபுரம், காமாட்சிபுரம், மதுராபுரி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல துணை மின் நிலையங்கள் மிகவும் பழமையானவை. டவர் மின் பாதையில் இருந்து மின்சாரம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வோல்ட்டாக துணை மின் நிலையத்தில் உள்ள பவர் டிரான்ஸ்பார்மருக்கு வரும். பவர் டிரான்ஸ்பார்மர் அதை 22 ஆயிரம் கிலோ வோல்ட்டாக மாற்றி , நகரில் உள்ள டிரான்ஸ்பார்மர்களுக்கு அனுப்பும். டிரான்ஸ்பார்மர்களில் இருந்து வீடுகளுக்கு 230 வோல்ட்டாக குறைத்து வழங்கும்.
மாதந்தோறும் ஒரு நாள் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் பணியாளர்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்கின்றனர். இருந்த போதும் சமீப காலமாக கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் நகரங்களின் மின் சப்ளையில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. இதற்கு காரணம் துணை மின் நிலையங்களில் ஏதாவது ஒரு பழுது ஏற்பட்டு வருகிறது. ஆனால் துணை மின் நிலையங்களுக்குள் பராமரிப்பு பணிகள் மேலோட்டமாக நடைபெறுவதே ஆகும். பழமையான துணை மின் நிலையங்களில் பிரேக்கர்களை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற வலியுறுத்தி வந்தனர். ஆனால் அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது தெரியவில்லை.
துணை மின் நிலையங்களில் உள்ள பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர்களில் இதயமாக கருதப்படும் பேட்டரி அறையில் உள்ள பேட்டரிகளை,ஆய்வு செய்து முறையாக பராமரிக்க வேண்டும். அப்போது தான் நகரில் மின் சப்ளை தடங்கல் இன்றி இருக்கும்.
வேளாண் இணைப்புகளை தனியாக பிரிக்க ரூ.50 கோடியில் பணிகள் மேற்கொள்ளும் போது, துணை மின் நிலையங்களின் பராமரிப்பும் மேற்கொள்ளப்படும் என்றனர். ஆனால் அந்த பணிகள் நடந்ததா என்பது தெரியவில்லை. பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து துணை மின்நிலலயங்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டால் தான் மின் சப்ளை தடங்கலின்றி இருக்கும்.