மலைக் கிராமங்களில் இரவில் வெளியே நடமாட வேண்டாம் ஒலி பெருக்கி மூலம் வனத்துறை எச்சரிக்கை
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு சிதம்பர விலக்கு அருகே கரடி தாக்கி முன்னாள் ராணுவ வீரர் சென்றாயப்பெருமாள் 65, பலியான சம்பவத்தை தொடர்ந்து மலைக்கிராமங்களில் வனத்துறையினர் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடமலைக்குண்டு அருகே கொம்புக்காரன்புலியூர், மேலப்பட்டி, சிதம்பரம் விலக்கு உட்பட பல மலை கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இப்பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது. வனப்பகுதி அருகே இருந்த தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ராணுவ வீரர் சென்றாயப்பெருமாள் கரடி தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனைத் தொடர்ந்து மலை கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என்றும் தண்ணீர் தேங்கும் இடங்கள், பனை மரங்கள், பழ வகை மரங்கள் உள்ள பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளனர். கரடி உட்பட வனவிலங்குகள் தென்பட்டால் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் கரடி, யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.