கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் விளக்கம் மாடுகளுக்கு அரிசி உணவுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்
தேனி: ‘மாடுகளுக்கு அரிசி உணவு வழங்குவதால் செரிமாண பிரச்னை ஏற்பட்டு வயிறு உப்புசம்'(Bloat)என்ற பாதிப்பு ஏற்படும்,’ என கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மனிதர்கள் போல் மாடுகளுக்குவயிற்றின் அமைப்பு கிடையாது. இறைவனின் படைப்பில் மாடுகளுக்கு 4 வயிறு அமைப்புகளை கொண்டது. மாடுகள் மனிதர்களை போல் எளிமையான உணவுகளை சாப்பிடுவது இல்லை. அவை புல், புண்ணாக்கு, கால்நடைத் தீவணங்கள் என கடினமான உணவுகளை உட்கொள்கின்றன. இந்த கடினமான உணவுகளை உட்கொள்ளும் மாடுகளுக்கு அவை செரிமானம் ஆக 6 மணி நேரம் ஆகும். முதல் 2 மணி நேரம் முதல் வயிற்றுப் பகுதியில் கடினமான புண்ணாக்கு, புல் வகை செரிமானம் நடக்கும். அது ஒரளவு முடிந்த பின் அடுத்த வயிற்றில் அந்த உணவுகள் மாறி அடுத்த 2 மணி நேரம் என நான்கு வயிறுகளிலும் செரிமானங்கள் 6 மணி நேரம் நடக்கும். இந் நடைமுறையில் மாடுகள் அசைபோடும். செரிமானம் நடந்த பின் உணவில் உள்ள சத்துக்கள் மாடுகளின் உடலின் கிடைக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. இதனை அறியாமல் அரிசியிலான பொங்கல், சாதம் உள்ளிட்டவற்றை பொது மக்கள் வழங்குவதால்6 மணி நேரம் நடக்கும் செரிமாணம், ஆறே நிமிடங்களில் செரிமானம் ஆகி உணவு நேரடியாக 3வது வயிறு, 4வது வயிறுக்கு சென்றுவிடும். இதனால் முதல், 2வது வயிற்றில் வாயு உண்டாகி, வயிறுஉப்புசம்’ (bloat) பாதிப்பு ஏற்படும்.
வயிறு பலுான் போன்று பெருகுவதால் நுரையீரல், இதயம் அழுத்தப்பட்டு, மாடுகள் திடீர் இறப்பை சந்தித்துவிடும். அதனால் மாடுகளுக்கு அரிசியிலான சாதம், பொங்கல் உள்ளிட்டவற்றையும், பிற இலகு ரக உணவுகளையும் வழங்கக்கூடாது என்றார்