Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

ஐந்து கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்த அவலம் : ஆசாரிபட்டி வையாபுரி கண்மாயில் நீர் தேங்காததால் 200 ஏக்கர் பாதிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், ஆசாரிபட்டி வையாபுரி கண்மாயில் பல ஆண்டுகளாக நீர் தேங்காததால் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள ஐந்து கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

200 ஏக்கர் பரப்புள்ள இக்கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலை வேலப்பர் கோயில் பகுதியில் இருந்து நாகலாறு ஓடை வழியாக நீர்வரத்து உள்ளது. ஓடை வழியாக வரும் நீர் சங்கிலித்தொடராக உள்ள கோத்தலூத்து அதிகாரி கண்மாய், பிச்சம்பட்டி கண்மாய், ரெங்கசமுத்திரம், ஜம்புலிப்புத்தூர் கண்மாய்களுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக ஓடையின் குறைவான நீர் வரத்தால் ஆசாரிபட்டி வையாபுரி கண்மாய்க்கு நீர் கிடைக்கவில்லை. இதனால் விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ள இக்கிராமத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கண்மாயில் நேரடி பாசனம் பெற்று வந்த 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயம் பாதித்துள்ளது. கண்மாய் பிரச்னை குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:30 ஆண்டுகளாக நிரம்பாத கண்மாய்

தங்கப்பழம், ஆசாரிபட்டி: நாகலாறு ஓடையில் மழைக்காலத்தில் கிடைக்கும் நீர் கன்னியப்பபிள்ளைபட்டி அருகே பிரிக்கப்பட்டு ஆசாரிபட்டி கண்மாய்க்கு செல்கிறது. கடந்த பல ஆண்டுகளாக நீர்வரத்து ஓடை பராமரிப்பு இல்லை. ஓடையில் குறைவாக வரும் நீரும் கண்மாய்க்கு கிடைப்பதில்லை. நீர் தேங்காத கண்மாய் குறித்து பொதுப்பணித்துறையும் அக்கறை காட்டுவதில்லை. கண்மாய் நிரம்பி 30 ஆண்டுக்கு மேல் ஆவதால் இப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமும் பாதிக்கிறது.

கடந்த முறை லோக்சபா தேர்தலில் மாவட்டதில் பிரசாரதிற்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலின் கண்மாயில் நீர் தேக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பேசினார். ஆட்சி அமைந்த பின் எந்த நடவடிக்கை இல்லை.

கால்வாய் மேடானதால் நீர் செல்வதில்லை

ராசா, ஆசாரிபட்டி: மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நாகலாறு ஓடை பள்ளமாகவும், கண்மாய்க்கு வரும் கால்வாய் மேடாகவும் இருப்பதால் நீர் முழுமையாக வந்து சேர்வதில்லை. கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல் மரங்கள் அகற்றப்படாமல் புதர்போல் நீர்தேக்கப் பகுதியை மறைத்துள்ளது.

கண்மாயில் நீர்தேக்கத்தால் வெங்கடாசலபுரம், அய்யனார்புரம், சண்முகசுந்தரபுரம், கரிசல்பட்டி பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து நிலத்தடி நீருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. விவசாயம் பாதிப்பதால் பலரும் அதனை கைவிட்டு மாற்றுக் தொழிலுக்கு செல்கின்றனர்.

மூலவைகை ஆற்றுநீர் வழங்க வேண்டும்

கோபால், ஆசாரிபட்டி: கண்மாய், நீர்வரத்து கால்வாயை தூர்வாரும் நடவடிக்கை வேண்டும். கண்மாயில் இருந்து 200 ஏக்கருக்கு நேரடி பாசன வசதி இருந்தும் கண்மாய் நீரை நேரடியாக பயன்படுத்துவதில்லை.

மடையில் நீரை திறந்தால், தேங்கியுள்ள குறைந்த அளவு நீரும் சில நாட்களில் வற்றி, நிலத்தடி நீருக்கு மேலும் பாதிப்பு ஏற்படும். இதனால் மடை திறக்க விவசாயிகள் அனுமதிப்பதில்லை.

வருஷநாடு மூல வைகை ஆற்றில் இருந்து மரிக்குண்டு, பாலசமுத்திரம் கண்மாய்களுக்கு நீர் வருகிறது. இந்த நீர் சில கி.மீ., தூரம் உள்ள ஆசாரிபட்டி கண்மாய்க்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேக்கம்பட்டி அருகே வாய்க்கால் மூலம் பிரித்து கொண்டு சென்றால் ஜி.உசிலம்பட்டி, சித்தார்பட்டி பகுதி கண்மாய்களும் பயன்பெறும். கண்மாயில் நீரைத்தேக்கி இப்பகுதி விவசயத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *